குச்சிக்காலன் 8

குச்சிக்காலன் - 8
படபடப்புடன் கடிததைப் படிக்க ஆரம்பித்தாள் கலா:
=
அன்புள்ள திருமதி. பலாராமன் அவர்களுக்கு,
எனது கலாவல்லி பினாயில் கம்பெனியில் தொழில் நுட்ப அதிகாரியாகப் பணியாற்றும் உங்கள் கணவர் பலராமனையும் அவரைத் தினமும் அரசு வேனில் ஏற்றி வரும் டிரைவர் வாசுதேவனையும் என் கம்பெனி அருகே இன்று மாலை ஆறு மணியளவில் போலீசார் கைது செய்தனர். உங்கள் கணவர் செய்த குற்றம் மிகச் சாதாரணமானது தான். கவலையோ பதட்டமோ அடைய வேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறேன். நாளையும் நாளை மறுநாளும் சனி ஞாயிறு நீதிமன்றத்துக்கு விடுமுறை என்பதால் அடுத்த நாள் திங்கட் கிழமை தான் ஜாமின் (பிணை) எடுக்க முடியும். எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். இது பற்றி யாரிடமும் எதுவும் சொல்ல வேண்டாம். உங்கள் கணவரை திங்கட் கிழமை உங்கள் வீட்டில் கொண்டு வந்து சேர்ப்பது எனது பொறுப்பு.
இப்படிக்குத் தங்கள் அன்புள்ள
தனபால்
==
கடிதத்தைப் படித்தவுடன் கலா அடைந்த வேதனை, ஆத்திரம், அவமானம், கோபம் ஆகியவற்றை வார்த்தையால் வர்ணிக்க முடியாது. தான் ஏமாற்றப்பட்டு விட்டோமே என்று குமுறிக் குமுறி அழுதாள். தன் கணவன் அரசு அதிகாரி என்று இதுவரை எல்லோரிடமும் ஜம்பம் காட்டியவள் கலா. அவன் ஒரு பினாயில் கம்பெனியில் வேலை பார்ப்பவன் என்று அறிந்ததும் கலா துடித்துப் போனாள்.
=====
தன் கணவன் அரசு அதிகாரி அல்ல என்ற உண்மை தெரிந்தால் ஊர் வம்புக் கழகத்தின் முக்கிய உறுப்பினர்களான, காத்தாயி, ரங்கநாயகி, மல்லிகா, குமுதா ஆகியோர் தன்னை மதிக்கமாட்டார்களே என்று கவலைப்பட்டாள் கலா. இதுவரை அவர்களோடு சேர்ந்து யார் யாரைப் பற்றியெல்லாம் தான் என்னென்ன பேசினோம் என்பதையெல்லாம் நினைத்துப் பார்த்த
கலாவுக்கு அவமானம் தொண்டையை அடைத்தது. தான் அரசு அதிகாரியின் மனைவி என்ற அந்தஸ்த்தில் இதுவரை முடிசூடா ராணியாக விளங்கியவள், இபோது அந்தக் கூட்டத்திலிருந்து ஒதுக்கப்படும் நிலையை எண்ணிக் கண்ணீர் விட்டாள். இனிமேல் ஊர்வம்புக் கழகப் பெருந்தலைகள் தன்னைப் பற்றியும் தன் காதல் கணவன் பலராமனைப் பற்றியும் என்னவெல்லாம் பேசுவார்கள் என்று எண்ணிப் பார்த்த கலா அவமானத்தால் துடித்தாள். அவள் கணவன் தன்னை ஏமாற்றியது வேதனையை அளித்தாலும் அவன் தன் மீது கொண்ட கிறுக்குத்தனமான அனபை அந்த ஆண்டவனே வந்தாலும் அசைக்க முடியாது. அந்த அன்பு தான் அவளுக்கு இப்போது ஆறுதல் தரும் ஒப்பற்ற அருமருந்து.
====
அடுத்த நாள் செய்தித் தாள்களில் “அரசு வேன் டிரைவரும் தனியார் கம்பெனி அதிகாரியும் கைது” என்ற தலைப்பில் விரிவான செய்தி வெளியாகி இருந்தது. கருப்பையா ஆறாம் வகுப்பு வரை படித்தவன் தான் என்றாலும் “நாளும் கற்பது வாழ்க்கை” என்ற தத்துவத்தில் நம்பிக்கை உள்ளவன். அவனைப் பொறுத்தவரை தினமும் முடிந்தவரை எல்லா தமிழ் நாளிதழ்களையும் அருகில் உள்ள கிளை நூலகத்தில் படிப்பதையே கற்றல் என்று பொருள் கொள்பவன்.
=====
அவன் இரவு நேரப் பணி முடிந்தவுடன் நேராகப் பக்கத்துத் தெருவில் உள்ள டீ கடையில் தேநீர் குடித்துவிட்டு அருகில் உள்ள நூலகம் சென்று செய்தித் தாளகளை ஒரு புரட்டு புரட்டிவிட்டுத்தான் வீட்டுக்கு வருவான். அன்று காலையும் வழக்கம் போல செய்தித் தாள்களைப் புரட்டினான். கைது, கற்பழிப்பு, தற்கொலை, கள்ளக் காதல், வன்முறை, காதலர் ஓட்டம், அரசியல் மற்றும் சினிமா பற்றிய செய்திகளை மெத்தப் படித்தவர்களே விரும்பிப் படிக்கும்போது கருப்பையா போன்ற எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் விதிவிலக்காக இருக்கமுடியுமா?
=======
அன்று கருப்பையாவின் கண்களை உறுத்திய செய்திகளில் குச்சியார் பற்றிய செய்தியும் ஒன்று. செய்திகளை வாய்விட்டு சத்தமாக வாசிப்பது தான் கருப்பையாவிற்குப் பிடிக்கும்: “அரசு வேன் டிரைவரும் தனியார் கம்பெனி அதிகாரியும் கைது. பாவிங்க என்ன தப்புப் பண்ணி மாட்டிகிட்ட்டானுகளோ? …ம் மேற்கொண்டு படிப்போம்” என்று ஆரம்பித்தான் கருப்பையா. செய்தியின் சாராம்சம் இது தான்: தமிழக அரசின் தொழில் துறையில் டிரைவராக வேலை பார்ப்பவர் வாசுதேவன். வயது 30. தொழில் துறை இணை இயக்குநர் பரமசிவம் என்ற அதிகாரிக்கு ஒதுக்கப்பட்ட வேனை ஓட்டுவதுதான் வாசுதேவனின் வேலை. இவர் தனது அதிகாரிக்குத் தெரியாமல் அரசு வேனை தனியார் கம்பெனி ஒன்றில் தொழில் நுட்ப அதிகாரியாக வேலை பார்க்கும் பலராமன் என்பவர் தன் சொந்த உபயோகத்துக்குப் பயன்படுத்த உதவி வருவதாகக் கூறப்படுகிறது. இதற்காக அந்தத் தனியார் கம்பெனி அதிகாரியிடம் மாதந்தோறும் டிரைவர் வாசுதேவன் ஒரு குறிப்பிட்ட தொகையைப் பெற்றுக் கொள்வதாகவும் தெரிகிறது.
டிரைவர் வாசுதேவன் அரசு வேனை வழக்கமாக இரவு நேரத்தில் நிறுத்தும் இடத்திலிருந்து தொழிற் துறை இணை இயக்குநர் பரமசிவத்தின் வீட்டிற்குச் செல்லும் வழியில் தனியார் கம்பெனி அதிகாரி பலராமன் பணி புரியும் கம்பெனியும் அவரது வீடும் உள்ளதால் வாசுதேவன் அரசு வாகனத்தைத் தன் சுய லாபத்திற்காகப் பயன்படுத்த மிகவும் வசதியாக இருந்தது. தனியார் கம்பெனியில் தொழில் நுட்ப அதிகாரியாக இருக்கும் பலராமன் தான் ஒரு அரசு அதிகாரி என்று சொல்லி தான் குடியிருக்கும் பகுதியில் இருப்போரை நம்ப வைத்துள்ளார். அரசு வாகனத்தில் அலுவலகத்துக்குப் பயணம் செய்தால் தனது மதிப்பும் அந்தஸ்தும் உயரும் என்ற எண்ணத்தில் தான் இந்தக் குற்றத்தைச் செய்திருக்கிறார். பலராமன் அரசு அதிகாரி அல்ல; அவர் தனியார் பினாயில் கம்பெனியில் தொழில் நுட்ப அதிகாரியாக வேலை பார்ப்பவர் என்பதைத் தெரிந்து கொண்ட யாரோ ஒருவர் தொழில் துறைக்கு மொட்டைக் கடிதம் அனுப்பியுள்ளார். அந்த மொட்டைக் கடிதாசின் அடிப்படையில் உண்மையைக் கண்டறிய ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் கொடுக்கப்பட்டது. நேற்று மாலை சுமார் 6.30 மணி அளவில் பலராமனை வீட்டிற்கு அழைத்துச் செல்ல அவர் வேலை பார்க்கும் தனியார் கம்பெனிக்கு வேனை வாசுதேவன் ஓட்டிச் சென்றுள்ளார். பலராமன் வேனில் ஏறி அமர்ந்ததும் அங்கு மறைந்திருந்த போலீசார் லபக்கென்று பாய்ந்து சென்று டிரைவர் வாசுதேவனையும் தனியார் கம்பெனி தொழில் நுட்ப அதிகாரி பலராமனையும் கைது செய்தனர். இருவரையும் 15 நாட்கள் நீதி மன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். இந்தச் செய்தியைத் தான் கருப்பையா சுவராஸ்யமாகப் படித்து முடித்தான். இன்னும் வெளிவர வேண்டிய உண்மைகள் எத்தனை இருக்குமோ என்று கருப்பையா யூகிக்க ஆரம்பித்தான்.
------ தொடரும்