ஆதலினால் காதல் செய்வீர்

கலித்துறை
எண்ணத்தி லாயிரம் ஏற்றக் கவிகள் எழுந்துவரும்
மண்ணினில் பாதம் பதியா திமயம் மிதந்துவரும்
பெண்களின் பூமுகம் காதல் வளரப் பெருமைவரும்
வண்ணக் கனவுகள் ராத்திரி வந்தே வளமுறுமே !
பனிசூழ் இரவுகள் தீயாய்ச் சுட்டுப் படுத்திவிடும்
கனிவாழ் மரத்தின் நிழலில் படுத்துக் களிக்கசொலும்
தனிமை இனிக்கும் உடன்வரும் சொந்தம் தனைமறக்கும்
இனிக்கும் வெல்லம் கசக்கும் ! மிளகாய் இனித்திடுமே !
உடலில் இருக்கும் உயிரணு வெல்லாம் உடன்துடிக்கும்
மடல்திறக் கின்ற மலரினம் வந்து மனம்நிறைக்கும்
கடலுடை ஆழமும் நீளமும் சின்னக் கடுகாகும்
திடப்பெருந் தோள்கள் தனது வழுவ திழந்திடுமே !
காதலும் வந்தால் கடைவிழி யோரம் கனவுவரும் !
மோதிடும் எண்ணமும் மொத்தமாய் நீங்கும் ! முழுமைவரும் !
பாதகர் நெஞ்சமும் பாதிரிப் பூவாய்ப் படர்ந்தலரும்
ஆதலி னாலருங் காதலைச் செய்வீர் அனைவருமே !
-விவேக்பாரதி