ஆதலால் காதல் செய்வீர் - மண் பயனுற வேண்டும் கவிதைப் போட்டி

சொந்தங்கள் தந்த சுகமும் நண்பர்கள் பகிர்ந்த உறவும் பெரிது
நெஞ்சங்கள் மகிழும் நினைவுகள் நீளும் செறிந்து எனினும்
அவசரத்தில் கைமாற்று விரும்பவோ அநியாயம் செய்கையில் இடித்துரைப்பதோ
தவறிப்போகையில் தடுக்கவோ முடியாது போகும் தருணத்தில்.
அவ்வுறவில், ஒட்டும் பசையாய் எதுவுமில்லை என்ற அறிவு வரும்
அங்கே “எட்ட நின்றால்தான் கிட்ட உறவு”!

எடுத்தெறிதல், பழித்துரைத்தல், தலைக்கனத்தில் தடம்மாறல்,
அவசரத்தில் வார்த்தைவிடல், கொலையிலும் கொடுஞ்சொல்லாடல்,
பேதைமை, பயம், பாசாங்கு, கோபம், விரக்தி, வக்கிரம் எல்லாம்
இல்லாமல் போகுமே அருகிருந்து ஆழ்விழி பார்த்து
அக்கம் பக்கம் மறந்து உன் சிறங்கை உணவுண்கையில்
புரையேறும் முன்னே தட்டிவிட
விரையும் உன்கை என் தலையேறும்போதில்!

அரைகுறை வாழ்க்கைக்கு முழுமையளித்த
எனக்காக நீயும் உனக்காக நானும் உயிர்வாழ்கிறோம் எனுமறிவும்
உன்னைவிட்டால் நானுமில்லை என்னைவிட்டால் நீயுமில்லை
எனும் உணர்வும் அடிக்கடி அலையாடும்.
அண்மையும் தொலைவும் இல்லா அரும்பெரும் உணர்வால்
மனிதப்பண்பைப் பெருக்கும் இந்தச் சாகும்வரை உறவு
ஆதலால் காதல் செய்வீர்!

எழுதியவர் : இ.ரமணன் (2-Feb-15, 3:17 pm)
பார்வை : 52

மேலே