பிப்ரவரி தகராறு -சந்தோஷ்

வருகின்ற பிப்ரவரி 14
உலக காதலர் தினமாம்.
அன்று,
என்ன நிற உடையை
நான் உடுத்துவது..?

காதலிக்க
காத்திருக்கிறேன் என்று
பச்சை நிறமா ?

பலரை காதலிக்கும்
மன்மதன் என்று
ரோஜா நிறமா ?

ஒருத்தியின்
காதலன் என்று
வெள்ளை நிறமா ?

திருமணத்திற்கு
ஒப்புக்கொண்டவன் என்று
ஆரஞ்சு நிறமா ?

காதலை
ஒதுக்குபவன் என்று
சிவப்பு நிறமா ?

காதலிக்காத
அழுத்தக்காரன் என்று
நீல நிறமா ?

காதலில்
தோற்றவன் என்று
மஞ்சள் நிறமா?

காதலியால்
புறக்கணிக்கப்பட்டவன் என்று
கருப்பு நிறமா ?

காதலே
விரும்பாதவன் என்று
சாம்பல் நிறமா ?

அடடா ...!
எத்தனை எத்தனை நிறங்களடா..!
அத்தனையிலும் அர்த்தமுள்ளதடா..!

தலைச்சுற்றி தெளிந்து
உடனடி பகுத்தறிவில்
ஒரு தீடீர் முடிவெடுத்தேன்.!

எந்த ஆடையுமின்றி.
நிர்வாணமாகவே அன்று
இருந்துவிடுவோம் என்று.

ஆம்.......!
நான் காதலை
கற்பனையில் எழுதி
கவிதை என்று
காகிதத்தில் துப்புகிறவன்.

என் கவிதை
எச்சத்தின் இனிப்பை
எறும்புக்களும் ஈக்களும்
மட்டுமே மேயட்டுமே...!

மானிட மகளிர்களே...!
சற்று ஒதுங்கிக்கொள்ளுங்கள்
எனக்கு...
காதல் தீண்டாமை நோயிருக்கு..!


-இரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (3-Feb-15, 2:28 am)
பார்வை : 244

மேலே