வெண்பா வாழ்த்து

செ. இரா. செல்வக்குமார் என்ற பேராசிரியர் தனக்கு 13-17 வயது இருக்கும்பொழுதே தான் இயற்றி இருந்த குறள்வெண்பாக்களில் சிலவற்றை அண்மையில் (முகநூலிலும், சந்தவசந்த மடற்குழுமத்திலும்) வெளியிட்டிருந்தார், அந்த வயதிலேயே திருக்குறளை உள்வாங்கி, அதன் கருத்துக்களை உட்கொண்ட அழகிய எளிய இலக்கணப் பிழையற்ற குறள்வெண்பாக்களை அவர் இயற்றியிருந்தது என் மனத்தை மிகவும் கவர்ந்தது... அவர் மீது பெரிய மதிப்பு தோன்றியது (முன்னரே பெரிய மதிப்புதான்!) அதனால் எழுந்த வாழ்த்துப்பாக்கள் இவை... (இந்தக் கதையெல்லாம் தெரிந்தால் பாடல்களைப் புரிந்துகொள்ளவும், சுவைக்கவும் உதவும் என்றே சொன்னேன், உங்கள் பொறுமையைச் சோதித்திருந்தால் பொறுத்தருள்க!)

ஆர்மோன்கள் உந்த அலைந்தேன்நான் அவ்வயதில்
பார்போற்ற யாத்தீர் பருவத்தில் - சேர்மூன்றுப்
பாலளித்த பேராசான் பாதையிலே தாஞ்சென்ற
வாலறிவிற் கென்சொல்வேன் வாழ்த்து?!

தேமா தெரியேன் புளிமா புரியேனே
தாமாய் வருவதையும் தட்டிடுவேன் - தாமோ
தமிழன்னை தானே மகிழ்ந்திடவே தந்தீர்
அமிழ்தின் இனிய ”அறம்”!

பதின்ம வயதில் அறக்குறள் யாத்த
மதிக்குப் பெரிதென் மதிப்பு!

[”அறம்” - ‘அறக்குறள்’, தனது குறள்வெண்பாக்களுக்கு அவரிட்ட பெயர்]

எழுதியவர் : விஜயநரசிம்மன் (4-Feb-15, 6:37 pm)
பார்வை : 303

மேலே