குறைந்த வார்த்தை நிறைந்த வெற்றி
வாழ்நாளெல்லாம் நல்ல செயல்களையே செய்து கடவுளை தினம் தரிசித்து சேவை செய்துவந்த ஒரு மூதாட்டியின் கனவில் ஒருநாள் கடவுள் தோன்றினார்.மூதாட்டியே இளமை முதற்கொண்டே உன் நல்ல உள்ளத்தையும் ,நீ என் மீது கொண்ட பக்தியையும் கண்டுமெச்சினேன்,
நீ விரும்பிய வரத்தை தருகிறேன் கேள் என்றார்.
உடனே அந்த மூதாட்டி “நான் ஏழாவது மாடியில் நின்று என் எள்ளுப்பேரன் தங்கக்கிண்ணத்தில் பால் சாதம் சாப்பிடுவதை என் கண்ணால் காண வேண்டும் “என்றாள்.அதைக்கேட்டு அந்தக் கடவுளே ஒருநிமிடம் திகைத்துப் போய்விட்டார்.காரணம் ஒரே வரியில் சகல செளபாக்கியங்களையும் பெரும் வரத்தை அந்த மூதாட்டி சொன்ன விதம்தான்.
கடவுள் அந்த மூதாட்டியிடம் நீ எள்ளுப்பேரன் பிறக்கும் வரை பூமியில் நீண்ட ஆயுளுடன் வாழ விரும்புகிறாய்.அதுவும் மாடியில் படியேறிச்சென்று பார்க்கும் விதமாக உடல்பலமாக இருக்க எண்ணுகிறாய்,ஏழு மாடி வீட்டுக்கு சொந்தக்காரியாக வாழும் விதத்திலும்,பேரன் தங்கக்கிண்ணத்தில் பால் சாதம் உண்ணும் அளவுக்கு லஷ்மிகடாச்சமாக வாழ விரும்புகிறாய்,நீ என்மீது கொண்ட பக்தியையும் நல்லதையே நினைத்து நல்லதையே செய்து வந்ததால் இத்தனை வயதாகியும் அறிவுகூர்மையுடன் செயல்படுவதை நினைத்து மெச்சினேன் வேண்டிய வரத்தைப் பெற்றுக்கொள் என்றுவரத்தை அருளினார்.
எப்போதும் நற்சிந்தனையுடன் இருந்தால் வாழ்வில் வெற்றிமேல் வெற்றி வந்து சேரும்,மேலும் குறைந்த வார்த்தையில் நிறைந்த வெற்றியையும் பெறலாம்.