குடைக்குள் வாருங்கள் -ரகு
கவிதைப் பயணம்
தொடங்கும் முன் கவனியுங்கள்
கவிஞர்காள்
கர்ப்பம் தரிக்காத
கற்பனைக்குள் எப்படி
கவிதை சிசு
சாத்தியமாகும்
வெறும் ஒப்பனை
வார்த்தைகள் எப்படி
உணர்வுகளை
உயிர்ப்பிக்க முனையும்
சிந்தையில் உதிப்பதெல்லாம்
சிறகுவிரிக்காது கவிதைகளாய்
சற்று பொறுங்கள்
கவிதைப் பூச்சூடும் முன்
கண்களைத் திறவுங்கள்
வார்த்தைகளை
வளித்துப்போடாமல்
வலித்த வாழ்க்கையைச்
சேருங்கள்
பாலைவனத்தில்
மணல் அள்ளுவதைவிட்டு
ஒரு மரம் நட்டுவையுங்கள்
சமூக
அவலங்களைத்
திணிக்காமல்
தெருவிலிறங்கித் தேடுங்கள்
உணர்வு தொட்டதை
உயிரில் எழுதி
உலகுக்குத் தாருங்கள்
தயவுசெய்து
நேரம் ஒதுக்காதீர்
ஒதுக்கும் நேரத்தில்
ஒளியும் கவிதை
உணர்வுகள் விழிக்க
ஓடிவரும்
தன் பாதைகளில்
இருப்பதைத் தழுவும் நதி
வானம் தொட
எழும்புவதில்லை
சாமானியர்களும்
அமரப்பணித்த
"சிம்மாசனம்"
கவிதையானது
அமரும்வரை நாம்
சாமானியர்
அமர்ந்தபின்பு
உலகு நம்மை நோக்கும்
சான்றோராய்
மழைக்குக் குடைபிடித்தது போதும்
கோடையிலும் ஒருநாள்
குடைக்குள் வாருங்கள்
பிரகடனப் படுத்தாதப்
போருக்கு வாளைத் தீட்டாமல்
தெருச் சண்டைகளுக்குத்
தீர்வுகாணுங்கள்
ஒரே ஒரு வரியாயினும்
உணர்வு சிலிர்க்க உட்புகட்டும்
ஒரு சொட்டு மழை
உயிர் தொடுதல் போல !