சாய்ந்த கோபுரமும் சாயாத மனித நம்பிக்கையும்

காலை பத்து மணி. விசாரணைக் குழு அங்கத்தினர்கள் யாவரும் அவைக்கு வந்து விட்டார்கள். விசாரணைக் குழுத் தலைவன் தன் இருக்கையில் வந்தமர்ந்தார். அவரின் இருக்கைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கும் அலங்காரச் சர விளக்கு காற்றிற்கு மெதுவாக முன்னும் பின்னும் அசைந்தாடியது. கைதிக் கூண்டில் நின்று கொண்டு அதையே உற்றுப் பார்த்த அந்த முதியவருக்கு உலக அதிசயங்களில் ஒன்றான சாய்ந்த கோபுரத்திற்கருகில் இருக்கும் தேவாலாயத்தின் அலங்கார விளக்குதான் ஞாபகத்திற்கு வந்தது. அவருக்கு அப்போது வயது இருபதுதான் இருக்கும். தேவாலயத்தின் சர விளக்கு காற்றில் ஆடும் போதெல்லாம் தன் மணிக்கட்டின் நாடித் துடிப்பின் மூலம், சரவிளக்கின் ஊசலாட்ட நேரத்தைக் கணக்கிடுவார். ஒவ்வொரு ஊசலாட்ட நேரமும் ஒரே கால அளவில் இருப்பதாக அப்போதே அவர் கண்டறிந்தார். நீண்ட நேரம் சர விளக்கை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த முதியவரைப் பார்த்து விசாரணைக் குழுத் தலைவர் “உங்களின் முதிய வயது கருதி ஒரு கடைசி சந்தர்ப்பம் அளிக்கிறோம். சூரியனை சுற்றித்தான் எல்லா கிரகங்களும் சுற்றுகிறது என்ற இயற்கைக்கு எதிரான தத்துவத்தை போதிக்கும் கோபர் நிக்கஸின் கோட்பாட்டை மறுதலித்து ஒரு அறிக்கை வெளியிட்டால் போதும். உங்களை மன்னித்து விடுதலை அளித்து விடுவோம்“ என்றார். சபையோரின் கண்களில் தெரியும் மூடத்தனத்தைக் கண்ட அந்த முதியவர் “என்னைப் பொய் கூற நிர்பந்திக்க தங்களால் நிச்ச்யம் முடியாது” என்று வெகு நிதானமாக வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசினார்.
“ஐயா, தாங்கள் செய்த இந்த குற்றத்திற்கு என்ன தண்டனை தெரியுமா? திருச்சபையை அவமதித்த குற்றத்திற்காகவும், இயற்கைக்குப் புறம்பான தத்துவத்தை மக்களிடையே பிரசங்கித்ததற்காகவும், இத்தாலிய அரசியல் சட்டப்படி ஆயுள் தண்டனை கிடைக்கும்” என்று மூச்சிறைக்க பேசி முடித்து தன் கையில் இருக்கும் தாளினை குறுக்கு வசமாக இரண்டாக மடித்து இருக்கையில் வந்தமர்ந்தார் குழுத் தலைவர்.
நிச்சயம் தன்னை தண்டனைக்குள்ளாக்குவதற்கான அனைத்து முயற்சிகளிலும் சபையோர் அனைவரும் திட்டமிட்டு இயங்குவதை அறிந்த முதியவர் “பரவாயில்லை சீமான்களே. என்னால் நிச்சயம் தங்களின் தவறான கருத்துக்களுடன் ஒத்துப் போக முடியாது. நேரத்தை வீணடிக்காமல் எனக்கான தண்டனையை தாங்கள் தாராளமாக வழங்கலாம்” என்றார்.
முதியவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவரின் வயது கருதி தெற்கு பிளாரென்ஸில் உள்ள தனி வீட்டில் அவரை சிறை வைத்தார்கள். நகர எல்லைக்கு அப்பால் இருந்ததால் எந்த வித இரைச்சல்களும் இல்லாமல் நெடிய அமைதி அங்கு சூழ்ந்திருந்தது.

அன்று பலத்த மழைக்குப் பிறகு லேசான தூரல் விட்டுவிட்டுத் தூறிக்கொண்டே இருந்தது. வீட்டைச் சுற்றிலும் தேங்கிய மழை நீர்த் தேக்கங்களில் வீட்டின் வடிவம் தெளிவாகப் பிரதிபலிப்பதும், அடுத்த நொடியிலேயே மழைத் துளிகள் பட்டுக் கலைவதுமாக இருந்தது. அகன்ற அந்த வீட்டு வாசலின் இருபுறமும் நிற்கும் அரசாங்கக் காவலர்கள் தத்தம் பணி முடிய அடுத்து வரும் காவலர்களுக்காக பொறுமையின்றிக் காத்துக் கொண்டிருந்தார்கள்.

முதியவரின் கண்பார்வை மங்கிக் கொண்டே வந்தாலும், எப்போதும் எதையாவது படித்துக் கொண்டும், எழுதிக் கொண்டும்தான் இருப்பார். குளிரின் அவதி தாங்காமல், இரண்டு சிறிய விறகுத் துண்டங்களை நடு அறையில் இருக்கும் கணப்பு ஏற்படுத்தும் பகுதியில் போட்டு மீண்டும் ஜன்னலருகே வந்து நின்றார். பழைய காவலர்களின் பணி நேரம் முடிந்து புதுக் காவலர்கள் பொறுப்பேற்றிருந்தார்கள். ஈரம் படிந்த சுற்றுச் சுவர்களில் பற்றித் தொங்கிக்கொண்டிருக்கும் சிறு மலர்க் கொடிகள் ஒன்றோடொன்று மோதி காற்றிற்கு அசைந்தாடியது. திரைச் சீலைகளற்ற விசாலமான கண்ணாடி ஜன்னலுக்கு அருகில் உள்ள சாய்வு நாற்காலியில் அமர்ந்த முதியவரின் நினைவுகள் பின்னோக்கிச் சென்றது. அந்த முதியவர்தான் உலகப் புகழ் பெற்ற வான சாஸ்திர மேதையான கலீலியோ கலீலி.

வசந்த காலம் என்பதால் அந்தக் கற்பாலத்தில் வழக்கத்திற்கு மாறாக ஏராளமான பட்டாம் பூச்சிகள் பறந்து கொண்டிருந்தது. மழை நீரினால் பாசி படர்ந்த பாலச் சுவர்களில் சிறு சிறு ஊதாப் பூக்களும் ஆங்காங்கே பூத்திருந்தது. பாலத்தின் கைப்பிடிச் சுவற்றினைப் பற்றியபடி நின்று கொண்டிருந்தான் மாசிமோ. தன் மாமா அண்டோனியோவின் படகை எதிர்பாத்தபடி நின்றிருந்தவன், அவன் அம்மா கொடுத்தனுப்பிய உணவுப் பொட்டலத்தை சுவற்றின் மேல் வைத்து அதைத் தன் வலது கையால் பாதுகாப்பாக அரவணைத்திருந்தான். பாலத்தின் கீழ் இருக்கும் குறுகிய கணவாய் பகுதி வழியாக மாமாவின் படகு கடந்து செல்லும் நேரம் பார்த்து மாசிமோ ஒரு கையில் சீஸ் பொட்டலத்தையும், மறுகையில் ரொட்டித் துண்டையும் ஒரே நேரத்தில் கீழே போட்டான். அதைத் தன் இரு கைகளாலும் பெற்றுக்கொண்ட அண்டோனியோ மாலை சீக்கிரம் வீடு திரும்பி விடுவேனென்று உரத்த குரலில் கூறி, மாசிலோனாவைப் பார்த்து நீண்ட நேரம் கை அசைத்தான். இதை மிக அருகில் இருந்து கூர்ந்து கவனித்த கலீலியோவின் விஞ்ஞான மனதில் ஒரு பொறி தட்டியது. ஒரு குறிப்பிட்ட உயரத்தில் இருந்து வித்தியாசமான எடையில் இரண்டு பொருட்களைப் கீழே போட்டால், ஏறக்குறைய இரண்டும் ஒரே நேரத்தில் பூமியை வந்தடையும் என்ற அறிவியல் உண்மையை நிரூபிக்க அவர் மிகவும் போராடவேண்டி இருந்தது. அரிஸ்டாட்டலின் தத்துவப்படி பொருட்கள் பூமியை வந்தடையும் நேரம், அதன் தம் எடையைப் பொறுத்துத்தான் என்ற கருத்தியலை பொய்ப்பிக்க கலீலியோ அரும்பாடுபட்டு ஏராளமான பரிசோதனைகளை பிஸ்ஸாவில் அமைந்த உலக அதிசயங்களில் ஒன்றான சாய்ந்த கோபுரத்தில்தான் மேற்கொண்டார். அவரின் ஆராய்ச்சிக்குத் துணையாக மாசிமோவும் உடன் இருந்தான். ஒவ்வொரு முறையும் சாய்ந்த கோபுரத்தின் மணிக் கூண்டில் நின்று கொண்டு கலீலியோ மாறுபட்ட எடைகளில் உள்ள இரண்டு உலோகப் பந்துகளை மேலிருந்து கீழே போட, மாசிமோ அவைகள் தரைக்கு வந்தடையும் நேரத்தைக் குறித்துக் கொள்ள வேண்டும். கலீலியோவின் கையிருப்பில் உள்ள உலோகப்பந்துகள் தீர்ந்தவுடன் மணிக்கூண்டில் இருந்து மாசிமோவிற்கு சைகை செய்வார். அவனும் கீழே விழுந்த அனைத்து உலோகக் குண்டுகளை சேகரித்துக் கொண்டு 294 படிக்கட்டுகளைத் தாண்டி மேலே இருக்கும் மணிக்கூண்டிற்கு வந்தடைவான்.

“என்ன மாசிமோ களைப்பாயிருந்தால், நம் பரிசோதனையை நாளை வைத்துக் கொள்ளலாம்” என்று கலீலியோ கூறும் போதெல்லாம், “ இல்லை ஆசானே, எனக்கு துளியும் களைப்பே இல்லை. மீண்டுமோர் பரிசோதனை நடத்தி விடுவோம்” என்று மின்னலெனப் படி இறங்கிடுவான்.

மொத்தம் எட்டு மாடிகள் கொண்ட கோபுரத்தின் மேலிருக்கும் வெள்ளைப்பளிங்கினால் ஆன மணிக் கூண்டு மட்டும் 170 அடி உயரம் கொண்டது. இந்தக் கோபுரம் அஸ்திவாரத்தில் இருந்து 14 அடிக்கு விலகி சாய்ந்திருப்பதுதான் இதன் சரித்திர முக்கியத்துவத்திற்குக் காரணம். தென் கிழக்குப் பகுதியில் இருக்கும் கோபுரத்தின் சாய்வு நிலையில் இருந்துதான் கலீலியோ பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.

கடுமையான முடக்கு வாதத்தாலும், கண்பார்வைக் குறைவாலும் கலீலியோ மிகம் அவஸ்தைப்பட்டார். தன் கடைசி நான்கு வருடங்களில் அவர் பார்வை முழுவதையும் இழந்திருந்தார். தண்டனைக் காலம் முழுவதையும் இறக்கும் வரை வீட்டுச் சிறையிலேயே கழித்தார். அவருக்கு 77 வயதிருக்கும் போது விஷக் காய்ச்சலால் மிகவும் சுகவீனப்பட்டார். அதுவே அவரின் கடைசி சுகவீனம். ஒரு வருடம் கழித்து 1642 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி உயிர் துறந்தார்.

1971 ஆம் வருடம், ஆகஸ்டு மாதம் இரண்டாம் தேதி அப்பல்லோ 15 இன் வின்வெளிக் குழுவில் ஒருவரன டேவிட் ஆர் ஸ்காட் சந்திரனின் நிலப்பரப்பில் இறங்கினார். தன் ஒரு கையில் பறவையின் சிறகையும், மறு கையில் ஒரு சுத்தியலையும் ஒரே நெரத்தில் கீழே போட, காற்றின் தடை துளியும் இல்லாததால், இரண்டும் ஒரே சமயத்தில் மெதுவாகத் தரை இறங்கியது. அதைத் தொலைக் காட்சியில் நேராகக் கண்டு ரசித்த கோடானுகோடி மக்கள் கைதட்டி பெருத்த ஆரவாரம் செய்தார்கள்.

183 அடி உயரமான சாய்ந்த பிஸ்ஸா கோபுரமும் கர்வத்துடன் தலையுயர்த்தி பார்க்கிறது, கலீலியோ கலீலியின் அசைக்க முடியாத பிரபஞ்சம் குறித்த நம்பிக்கையும், அவர் வாழ்ந்த உன்னதமான காலங்களையும்.

இப்படியாகத்தான் கட்டிகக் கலையில் ஏற்பட்ட மாபெரும் மனிதத் தவறு பிற்காலத்தில் சரித்திரப் புகழ் பெற்ற ஒரு வானவியல் விஞ்ஞானியை நமக்கு அடையாளம் காட்டியது.

எழுதியவர் : பிரேம பிரபா (8-Feb-15, 7:29 pm)
பார்வை : 181

மேலே