நான் மழை பேசுகிறேன்

நீல வானின் நித்திரைக் கலைத்தேன்

நிற்கா பூமியை நனைத்து அணைத்தேன்

சிரிக்கும் பூக்களைச் சிலிர்க்க வைத்தேன்

சிறகில்லா மனதின் சிந்தனைக் கலைத்தேன்

வெள்ளைப் பூக்களின் கொள்ளைச் சிரிப்பிலே

மயங்கி நின்றேன் , சில சமயம் விழுந்து வைத்தேன்

பச்சை புல்வெளி பூரித்து நிற்க


இச்சை வார்த்தைகளால் இதமாய் நனைத்தேன்

நிலவுப்பெண் நீங்கி சென்றாள் என

நிதர்சனம் கூறி நிற்காமல் வந்தேன்

உதிக்கும் சூரியனின் உள்ளத்தை கவர்ந்து

அணைக்கும் மேகக் கைகளால் ஒளித்து நின்றேன்

வானே கருணை செய் என

வாடி நின்ற உழவனுக்கு

வந்தேன் நானே என

வருத்தம் தீர வள்ளலாகினேன்

தீரா நதியாய் என்னைத் -

திருத்தம் செய்த நாளெல்லாம்

காடோ ,மலையோ ஏறிக் கனவாய்ப் போயிற்று

எங்கோ வந்தேன் ,எங்கோ சென்றேன் என

நாட்கள் இப்போதெல்லாம் நகர்ந்துப் போயிற்று

இல்லாதபோது இதமாய் அழைத்தான்

இருக்கும் போதோ நிந்தித்து தீர்த்தான்

என்னை சேமித்து நீர் வளமாக்கினால்

நெஞ்சம் குளிர நிறைவாய் பொழிவேன்

என்னை நீயும் யாரென கேட்டாய்?

இல்லல் தீர்க்க ,இடர்க் களைய வருவேன்

வள்ளல் எனப் போற்றி வணங்கி நிற்பான் - பின்

வந்தாயே எனக் கூறி பிணங்கி கொள்வான்

நானே நதியாவேன் ,நானே கடலாவேன்

நானே நாற்திசையும் நலமாக்கி நகர்வேன்

தேனே தினையே என

தித்திக்கும் வார்த்தை வேண்டாம்

என்னை வீணே விரயம் செய்யாது
விளங்க செய் உன்னுலகை - இன்னும்

விடை பகராமல் வினாவாகி நின்றேனோ!

என்னை மானுடன் மழை என்று சொல்வான்

இன்று நான் என் கதை சொல்லி நின்றேன்

இறுதியாய் உனக்கு ஒன்று

இன்னுலகின் இன்னலை தீர்க்க -

செய் என்னை நன்று!.

எழுதியவர் : இனியா பிரேம் (10-Feb-15, 8:06 am)
பார்வை : 260

மேலே