அப்பன் இல்லாப் பிள்ளை கவி வடிவில் கதை
![](https://eluthu.com/images/loading.gif)
பொன்மாலை பொழுதொன்றில்
பூவான பெண் எனக்கு
தாய் மாமன் குடிசைக்கட்டி
தலைக்கோதி ஆசிதந்தான் .
சிரம்தொட்ட மாமனவன்
சிந்தையிலும் கலந்துவிட்டான் .
காலங்கள் கரைந்தோட
காதலனாய் மாறிவிட்டான் .
யாருமற்ற வேளைதனில் காமதேவன் எம்மைப் பார்க்க
உணர்வுகளுக்கு இடம் கொடுத்து
உடல் பசிக்கு விருந்தளித்தோம் .
விருந்தோம்பல் வினையாக
கருவாக நீ ஜனித்தாய்.
தங்கத்தில் தாலி தந்து தாரமாய்
என்னை ஏற்க
கட்டுமரம் தானெடுத்து கடலுக்கு
சென்றவன் தான்
எல்லை தனை கடந்ததினால்
கரை வந்தான் பிணமாக .
கண்ணீரில் நான் குளித்த
காரணம் அறிந்திடம்மா
கருவில் நீ வளர களங்கமும்
வளர்ந்ததம்மா
காரணம் யாரென்று கழுகு கண்கள் தேடியது .
என் மாமான் புனிதனவன்
அவனை எவரும் வஞ்சித்தால் நான் துடிப்பேன் புழுவாக .
அதனால் தான் உயிரே
அப்பன் இல்லா பிள்ளை என்ற
அவமானம் வேண்டாம் உனக்கென்றேன்
மண் பார்த்து நீ
பிறந்தாய் மகிழவில்லை நான் இன்று .
ஈனப்பிறப்பென்று
பிறர்
இகழ்ந்திடும் முன்னமே
தாய்ப்பாலோடு
கல்லிப்பாலையும்
கலந்தே பருகிடம்மா .
தந்தை முகம் நீ
பார்த்து தகவல் சொல்லு தாய் எனக்கு
தயக்கம் வேண்டாம் செல் கண்ணே
நானும் வருகின்றேன் உன் பின்னே .
(கவி வடிவில் கதை .கயல்குட்டியின் சின்ன முயற்சி .தவறுகளை திருத்திக்கொள்ளவே ஆசை படுகின்றேன் தயவு கூர்ந்து கருத்து பகிருங்கள்)