விளக்கு அணையுங்கள்

நான் தான் இரவு!
பூமி பெண் மறந்து போன
அவளின் முந்தைய காதலன்!
நான் எங்கும் அவளை வியாப்பித்திருந்த
காலம் ஒன்று உண்டு.

இடையில் வந்தவன்தான்
இந்த வெளிச்சம்
ஏனோ அவன் மீது
இச்சை கொண்டு
இன்னும் அவனை
அவள் சுற்றி சுற்றி
வருகிறாள்.

அவனுக்காய் விடிந்தவுடன்
பூக்களால் அலங்கரித்து கொண்டு
பூரித்து போய் நிற்பாள்.
காலையில் வருவான்
மதியம் எரிச்சல் மூட்டி
சாயந்திரம் மறைந்து விடுவான்.

நான் அவன் இல்லாத
ஒவ்வொரு நொடியும்
ஒவ்வொரு இடுக்கினிலும்
ஒளிந்து ஒளிந்து
இவளை பார்த்து...
இவளுக்காய் காத்து
கிடக்கிறேன்......

விளக்கை அணையுங்கள்
என்னவள் உறங்க வேண்டும்....
அவள் உறங்கும் அழகை
நான் இரசிக்க வேண்டும்....

எழுதியவர் : சங்கீதா இளவரசன் (11-Feb-15, 6:14 pm)
பார்வை : 86

மேலே