கற்பனைக் குதிரை - மணியன்
புறங்கால் பிடரி பட
புழுதி பறக்கும்
புரவியின் துள்ளலுடன்
புதுமைப் பயணம் . . . . . .
அகரமும் உகரமும்
அகவலுடன் கொப்பளிக்க
ஆனந்த ஊஞ்சலில்
அழகான நாட்டியம் . . . . .
பாதை எங்கும் பூமரங்கள்
பாங்குடன் மணம் வீச
பாவலனின் காகிதங்கள்
பட்டமாகி சிறகடிக்கும் . . . . .
ஏந்திழைகள் விழி பார்த்து
ஏற்றமிகு வரிகள் கூடி
ஏகாந்த கவிதைகளாய்
ஏணியென உயராதோ . . . . .
பாமரர்கள் படுந்துன்பம்
பார்த்து மனம் பதைபதைக்க
சாமரம் வீசி வரும்
சாந்தம் தரும் வார்த்தை பல . . . . .
காளையர்கள் காதலிக்க
கன்னியர்கள் மனமினிக்க
காதல் பல பிறந்து
காவியங்கள் படைக்காதோ . . . . .
போற்றுகின்ற பாவலரும்
போர்முனைக் காவலரும்
ஆற்றல் மிகு மறவர்களும்
ஆனந்தக் கூத்தாட . . . . . .
வந்தாரை வாழ வைக்கும்
வளமிகு தமிழிருக்க
வார்த்தைகள் சரமாகி
வான் வரை நீளாதோ . . . . . .
தமிழிருக்கு தரமளிக்க
தாகமுண்டு நீர் தெளிக்க
வேகமுள்ள விரல்களெல்லாம்
வேண்டும் வரை எழுதிடுமே . . . . .
உயிரோடு மெய் கலந்து
உயிர்மெய்யாகி தினம் வளந்து
ஊற்றாகி பெருகி வரும்
உண்மைத் தமிழ் கவிதைகளே . . . . . .
*-*-*-*-*-*-*-*-*-*-*