அப்படியா இப்படியா காதலா - சந்தோஷ்
விருப்பவீதியில் கடந்துப்போகும்
பிரியத்திற்குரியவரை நோக்கும்நேரத்தில்
சொல்லத்தவிக்கும் அன்பை மென்றுவிழுங்கி
பெருமூச்சின் மெளன இசையாய்
இதயம் திக்திக் மெட்டுப்போடுகிறதா?
அதுதான் காதல்...!
சிறுசிறு முத்தப் பரிமாற்றத்தில்
இந்த பிரபஞ்சத்தையே நீ மறந்தாயா?
சிலநேர சண்டைகளில் ஆறுதலாய்
இந்த பிரபஞ்சத்தையே நீ நாடினாயா?
அதுதான் காதல்......!
இருவிழியில் கண்ட சதையழகை விட
ஓராயிரம் விழிகளுடைய உள்ளத்தினூடே
மாபெரும் ஒர் இதயழகை கண்டுமயங்கி
காதலென்று வீழ்ந்துவிட்டாயா....?
அதுதான் காதல்..!
அவளையோ அவனையோ
பிரிந்த நாழிகை முதலாய்
பாலைவன பிரதேசத்தின்
வெப்ப மணற்புயலில் சிக்குண்ட
எறும்பாய் உன்னிருதயம் தவிக்கிறதா?
அதுதான் காதல்.......!
பொது வெளியிடங்களில்
அருகருகே நெருங்கி அமர்ந்தாலும்
அவளின் மாண்பை காக்க
ஆசைகரங்களை அடக்கியவனா நீ....?
அதுதான் டா காதல்.....!
நூறு வயது கடந்தாலும்
தேகம் சுருங்கி காமம் விலகினாலும்
ஆறுதலாய், அன்பாய்
உயிரானவரின் தோள்களில்
ஆசை தலைசாய ஏங்குகிறதா மனம்.?
அதுதாங்க காதல்........!
இறுதியாய்,
நீ அன்புக்கொண்ட ஒருவனோ ஒருத்தியோ
விட்டுப்பிரிந்தாலும் ..அந்த அன்பு
தடைகளில் உடைந்திருந்தாலும்.
அது..........அது.......உனக்கு
நேசம் பெருக்கெடுத்து ஓடும் நதியாய்,
ஆழியின் ஆழத்தில் மூழ்கிய பாசமுத்தாய்,
இந்த மானுடத்தின் மேலாண்மையாய்
ஒரு மகத்தான உணர்வை நீ பெற்றிருந்தால்
அதுவே.......அதுவே.......அதுவே காதல்.......!
--------------------------
-இரா.சந்தோஷ் குமார்

