வரலாற்று யாத்திரைகள் 11

திலோத்தி....! தீக்குள் விரலை வைத்தால் தீண்டும் இன்பம் என்னும் பாரதி வாக்கை உண்மையாக்கிய அழகி... இவளின் எடைக்குத் தங்கம் தருகிறேன் என எவரும் தாராளமாகச் சொல்லலாம் அவ்வளவு மென்மையானவள். மேகப் பொதிவுகளுக்கு தங்கம் பூட்டினால் மேகம் சிதைந்துவிடக் கூடுமென எண்ணி... ரோஜாக்கள் போர்த்தி மணமுடித்துக் கொண்டுவந்திருந்தான் ஹரின்....
ஹரின்..... மொகலாயப் பேரரசின் ஆஸ்தான ஓவியன்... இதுவரை இவனது தூரிகைகளுக்குக் கட்டுப்படாத ஒரே ஓவியம் திலோத்தியினுடையது.. வரைய முற்படும் பொழுதெல்லாம் தூரிகைகள் என்பது விரல்களாகியிருக்கும். சுவரென்பது திலோத்தியாகியிருப்பாள். பாவம்.....வண்ணங்கள்தான் நசுங்கியே மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும்..இப்படியாக ஓவியம் கலைத்து விளையாடியிருந்தவனை அழைத்துவரச் சொல்லி ஓலை வந்திருந்தது பேரரசர் ஷாஜகானிடமிருந்து....
“ஹூசூர்..... செய்தி அறிந்தேன்..... வருந்துகிறேன்..” திலோத்தியின் மார்புகள் போலில்லை அவளது பற்கள்.. கொஞ்சம் கனம்தான்.. கழுத்துப்பகுதியின் பற்தடங்களை கைவைத்து மறைத்துக்கொண்டே பணிவோடு சொல்லியிருந்தான் ஹரின்...
பற்தடங்கள் மறைத்து நின்ற ஹரினிடம்.. மும்தாஜின் கால் தடங்கள் தொலைத்துவிட்ட ஷாஜகான் பேசத் துவங்குகிறான்.... “ ஹரின்... எனக்கு ஒரு ஓவியம் வேண்டும்...அது என் உணர்வாக இருக்க வேண்டும்.. உனக்குத் தெரியுமல்லவா..? என் உணர்வுகளெல்லாம்...!”..... உடைந்துபோன குரலை அரச கெளரவம் கருதி புறங்கையால் மறைத்து அது மும்தாஜ் எனப் புரியவைத்தான்.
“உத்தரவு ஹூசூர்.....” அதற்கு முன்னரே புரிந்துகொண்ட ஹரின் பின்னோக்கி நகர்ந்து பின் விடைபெற்றுப் பறந்தான்..
பிரிதல் வலி உணர்த்த தூரிகை எடுக்கும் பொழுதெல்லாம் ஹரினுக்கு திலோத்தியின் உதடுகள் பிரிந்து சுழிவதே ஓவியங்களாய் இடறுகிறது. என்ன செய்வது...... நான்காம் முறை.... ஐந்தாம்முறை.. என அரசனிடம் தோற்று...
“இனியொருமுறை தவறினால் சிரச்சேதம் செய்யப்படுவாய்” எனக் கட்டளைகள் ஏற்று திலோத்தியிடம் பகிர்கிறான் ஹரின்....
ஒரு புறா தலையைத் திருப்பி யோசிப்பதைப் போலவே யோசிக்கிறாள் திலோத்தி.....”ஹரின் இல்லாமல் நான் வாழ முடியாது. ஹரின் வாழ்ந்துவிட அவனுக்குத் தூரிகை இருக்கிறது. ஒரு கீறலை தூரிகையால் உணர்த்த இவனுக்குள்ளும் ஒரு கீறல் வேண்டும்... ஒரு பூங்கொத்து தொலைந்த வலியை உணர்த்த இந்தப் பூந்தோட்டம் ஹரினைவிட்டுத் தொலைந்துபோக முடிவெடுத்திருந்தது....
முடிவாக ஒருமாதகால அவகாசம் கேட்டு ஓலை எழுதுகிறாள். ஹூசூருக்கு....அனுமதியும் பெற்றாள்........
அடுத்த 25 நாட்களும் தூரிகையைத் தூக்கிப்போடு... என்னை இன்னும் கொஞ்சம் செதுக்கு எனக் கட்டளையிட்ட திலோத்தி... ஹரினின் உதடுகளைத் தன் உதடுகளால் கீறினாள். நாட்கள் கணக்கிடப்பட்ட அந்த வாழ்க்கையில் கணக்கில்லாமல் காதலைக் கொண்டாடியிருந்தார்கள் இருவரும். தேனில் குளித்தாள் திலோத்தி... அவளைத் தேனோடு தின்றான் ஹரின்.. கலவிக் களிப்பில் கண்ணீர் சுரந்தது திலோத்திக்கு. இளைப்பாற இந்தத் திராட்சை ரசம் போதுமெனக் குடித்தான் ஹரின்...இப்படியாகக் கழிந்திருந்த 25ம் நாளின் முடிவில் கழுத்தில் கீறிக்கொண்டு செத்துப் போயிருந்தாள் திலோத்தி....
இறகுகள் இழந்திருந்த பட்டாம்பூச்சியாகி விட்டிருந்தான் ஹரின்.... அவன் தீட்டிய வண்ண ஒழுக்குகள் எல்லாம் உப்புக்கரித்தன. இம்முறை அவன் வரைந்த ஓவியம் இரட்டைச் சோகம் சுமந்தது.. மும்தாஜோடு கலந்திருந்தாள் திலோத்தியும்...
ஓவியம் சேர்வதற்குள் செய்தி சேர்ந்திருந்தது ஷாஜகானை.. மயான அமைதியாய் ஓவியம்... எதிரே மயானமாய் ஹரின்... ஹரினை ஆரத்தழுவி அவனோடு கண்ணீர் கலந்து கொண்டான் ஷாஜகான்... கலந்த மறுநொடி செத்து வீழ்ந்திருந்தான் ஹரின்...
விக்கித்துப்பின் தெளிந்த ஷாஜகான்.. உத்தரவுகள் பிறப்பித்தான்.
“இந்த ஓவியத்தைப் போலவே மண்டபம் என் தேவதையின் கல்லறையைச் சுற்றி எழுப்பப்படட்டும். தேவதைக்குப் பக்கத்தில் திலோத்தியின் உடலும் அடக்கம் செய்யப்படட்டும்.. அது “தாஜ்திலோத்திமஹால்” என்றழைக்கப்படட்டும்.....”
அப்போது ஹரினின் கடைவிழிக் கண்ணீர்க்கோடு இனித்ததாய் அங்கிருந்து நகர்ந்த எறும்பு சொன்னது......!
நன்றி: உடைந்த நிலாக்கள் பாகம் 1