பூப் பூவாய்
இரட்டை மல்லிகை
வாசத்துடன்..
தென்றலின் தாலாட்டில்
சுகமாய் கொலுவிருக்கிறது..
முற்றத்தில்
கட்டியுள்ள மாடு
கழுத்து மணியசைத்து
மெளனமாக காத்திருக்கிறது
கன்று பால் குடித்துக் கொண்டிருக்கிறது..
வீதியில் சிறுவன் ஒருவன்
தகர டப்பாவை கயிற்றில் கட்டி
தேர் இழுத்து போகிறான்..
தர தரவென்று
கவலை ஏதுமின்றி..
குருட்டுக் காகங்கள்
கூரையின் மேல்
கரைந்து கொண்டிருந்தன..
வழக்கம் போல்
விருந்தினர் வரவு சொல்லி ..
இம்முறையும் வருபவர்கள்
பொண்ணு கறுப்பென்று
சொல்லிவிட்டுப் போவார்கள்
அவ்வளவுதானே
என்று..
இரட்டை மல்லிகை
வாசத்துடன்..
சஞ்சலக் காற்றில் மௌனமாய் ...
அசைந்து கொண்டிருக்கிறது
இன்னும் யாரும் பறித்திடாமல்!