பாரதி அங்கிள் யாரு -ரகு
யாருங் கவனிப்பதற்குள்
தெருவுல குப்பையைக்
கொட்டிட்டுவா
யாராச்சுங் கேட்டா
அப்பா வீட்ல இல்லன்னு சொல்
அம்பது ரூபா நோட்டு
சில்லற முறிச்சா
செலவாயிடும்
பக்கத்துவீட்டுக்குப் போய்
கொஞ்சம் சக்கரை வாங்கீட்டு வா
அண்ணாச்சிக்கு
ஒடம்பு சரியில்லையாம்
ஆஸ்பத்திரி கூட்டிப்போகச்
சொன்னா
வண்டியில பெட்ரோல் இல்ல
புரிஞ்சுதா
போன்ல வர்ற மாமங்கிட்ட
ஆயிரம் ரூபாக் கடனாக் கேட்கணும்
சத்தம் போட்டுத் தொலைக்காத
உனக்குத்தான் காய்ச்சல்
ஸ்கூல்ல டீச்சர்
பீஸ் கேட்டா
வெளியூர் போன அப்பா
இன்னும் வரல
பில் போடாமலேயே
பென்சில எடுத்துட்டு வந்துட்டா
அஞ்சுரூபா மிச்சம்
''பொய் சொல்லக் கூடாது பாப்பா - என்றும்
புறஞ்சொல்லலாகாது பாப்பா''
பாடம் நடந்துகொண்டிருக்கையில்
வகுப்பறையில்
கிசுகிசுத்தது குழந்தை
பாரதி அங்கிள் யாரு ?
பார்த்தா எங்க வீட்டுக்கு
கூட்டிட்டுப் போகணும்!