உயிர்வளியின் ஊடல் அவள் - இராஜ்குமார்

உயிர்வளியின் ஊடல் அவள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மின்னும் கனவின்
மின்மினி இறகில்
மீளாத ஒளிதனில்
மிதக்கும் என்னுயிரில்
நுழையும் தாகம் அவள் ..!

பனித்துளி ஊஞ்சலில்
மஞ்சள் தாவணியில்
தேனருவி சாரலில்
தேகம் நனைக்கும்
ஆசையின் ஆழம் அவள் ..!

வெட்டும் மெளனத்தில்
நளினம் நகர்த்தி
செவ்விதழைச் செதுக்கி
அழகியல் உயர்த்தும்
பருவத்தின் உருவம் அவள் ..!

நதியோர நடனத்தில்
விழிவழி வசனத்தில்
உயிர்த்துளி வர்ணமாய்
ஆருயிரை அசைக்கும்
ஆடலின் அபிநயம் அவள் ..!

நட்சத்திரத் தேசத்தில்
புதுமையின் ஆர்வமாய்
வான்வெளிப் பயணத்தின்
வாடகைச் சுவாசத்தில்
உயிர்வளியின் ஊடல் அவள் ..!

புன்னகைப் புதிர்களில்
புரியாமைப் புகட்டும்
உயிரியல் பிழையால்
மரணம் தவிர்த்த
உதிரத்தின் உணர்வு அவள் ..!

- இராஜ்குமார்

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (16-Feb-15, 9:38 pm)
பார்வை : 154

மேலே