சிந்திக்க சில விடயங்கள்
பொங்கல் வாழ்த்தாக கிடைத்த ஒரு சிறு புத்தகத்திலிருந்து தோழமை நெஞ்சங்களுக்காக,
ஆண்டவர் பாராபட்சம் அற்றவர். போற்றுபவரையும், தூற்றுபவரையும் ஒன்றாக பார்ப்பவர். விருப்பு வெறுப்பற்றவர். அரசராவதும், ஆண்டியாவதும் அவரவர் எண்ணங்களிலும், செயலாலும்தான். கடவுள் காப்பாற்றுவார் என்று நம்புங்கள். கோவிலுக்கு சென்று "உனக்கு ஆயிரம் ரூபாய் உண்டியலில் போடுகிறேன், எனக்கு அதைக் கொடு, இதைக் கொடு" என்று கேட்பதும் கடவுளை வியாபாரியாக ஆக்குவதும் கடவுளையே கேவலப்படுத்தும் செயல்.
வாழ்வில் வெற்றி தோல்விகள், இலாப நட்டங்கள் வரத்தான் செய்யும். கடவுள் நடுநிலையானவர். யாருக்கும் சிறப்பான கருணை காட்டும் ஓரவஞ்சனை அவருக்கு இல்லை. பாடுபட்டதற்கும், முயற்சிக்கும் பலன் கொடுக்கும் நீதிமான் அவர். உங்கள் வாழ்க்கையில் கிடைக்கும் தோல்விகளை வெற்றிக்குரிய ஏணிப்படிகள் என்று நினையுங்கள். வெற்றிகள் கிடைத்தாலும் எகிறி குதிக்காதீர்கள். வெற்றியோ தோல்வியோ இரண்டுமே ஓர் நாள் கடந்து போவதே என்பதை உணருங்கள்.
ஒவ்வொரு கோவில் வாசலிலும் கூட்டம் கூட்டமாக உட்கார்ந்திருக்கும் பிச்சைக்காரர்கள், "அய்யா.... சாமி... பிச்சை போடுங்கள்" என்று கேட்பவர்களிடம் நாம் ஏதோ பிச்சை போட்டுவிட்டு, கோவில் உள்ளே போய் ஆண்டவனுக்கென்று உண்டியலில் ரூபாய் நூறும் ஆயிரமும் போட்டுவிட்டு, பிச்சைக் காரனைவிட கேவலமாக "எனக்கு அதைக் கொடு, இதைக் கொடு" என்று ஆண்டவனை வியாபாரியாக்கி நாம் கேட்கும் பிச்சையை (Honest Beggar) என்னவென்று சொல்வது??
சரித்திரம் படித்தால் மட்டும் போதாது. சரித்திரம் படைக்க வேண்டும். எல்லோரும்தான் பிறக்கிறார்கள், வளர்கிறார்கள், திருமணம், குழந்தைப் பேறு என்று வாழ்ந்து பின் மரணம் எய்துகிறார்கள். சிலருக்கு இதில் அனைத்து வாய்ப்பும் கிடைப்பதில்லை. சிலர் அற்ப ஆயுளில் மரணம் எய்தி விடுகிறார்கள். நீங்கள் இந்த உலகில் பிறந்து உங்கள் குடும்பத்தாருக்கும், ஊருக்கும் நாட்டிற்கும் என்ன செய்திருக்கிறீர்கள் என்பதனை சற்று சிந்தித்துப் பாருங்கள். செய்யாவிடில் அனைவருக்கும் நன்மை செய்ய முற்படுங்கள். அஞ்சுதலும், கவலைப் படுதலும் கடவுளை நிந்தித்ததற்கு சமமாகும்.
கடவுளை வேண்டும்பொழுது "பிரச்சினை வராமல் காப்பாற்று" என்று வேண்டாதீர்கள். பிரச்சினைகளை சந்திக்கும் பலத்தையும், அதனை வெற்றி கொள்ளும் அறிவையும் அடையாளம் காட்டும்படி வேண்டுங்கள். சோதனைகளும், வேதனைகளும் இல்லாமல் சாதனை பிறக்கவே முடியாது. இன்பத்திற்காக மட்டுமே வேண்டுதல் விடுக்கும் மனதிற்கு துன்பமும் தோழனே என்று புரிய வையுங்கள். பிரச்சினைகளை மகிழ்ச்சியுடன் வரவேற்று, பின் வழி அனுப்பி வைக்கவும் பழகிக் கொள்ளுங்கள். அவை எதிரிகள் அல்ல. அவை மறைமுகமான நண்பர்கள். பிரச்சினையே இல்லாத வாழ்க்கை அர்ச்சனையே இல்லாத கோவில் மாதிரி.
----------------------> இன்னும் வரும்...................