பட்டணம்- மதராஸ்- சென்னை-பிரமிப்பு

இந்த 53 வயதில் இந்தியாவின் எத்தனையோ பெரிய,..சிறிய நகரங்களுக்கு சாதரணமாக போய் வந்திருக்கும் எனக்கு..ஏனோ சின்ன வயதிலிருந்தே இன்று வரை இப்போது சென்னை என்றழைக்கப்படும் மெட்ராஸ் (அப்போதெல்லாம் வெளியூர்க்கார்களுக்கு பட்டணம்) ஒரு அதிசயம்..பிரமிப்பு..ஆச்சரியம்..அலர்ஜி ..பயம்..இன்னும் என்னவெல்லாமோ..யோசித்து சொல்கிறேன்..

அந்த நாட்களில் 1970 வாக்கில் என் தந்தை பட்டணம் போய் வர போகிறார் என்றாலே எனக்கு பரபரப்பு ஏற்பட்டு விடும் .. இத்தனைக்கும் விடியற்காலை 4.45 மணிக்கு புதுச்சேரியில் (பாண்டிச்சேரி) புறப்பட்டு பேருந்து Progress Transport ஒன்று தான்..அப்புறம் ஒன்றோ இரண்டோ இருக்கும் என்று நினைக்கிறேன்..அதில் கிளம்பி (வீட்டில் இரவு 2 மணிக்கெல்லாம் எழுந்து குளித்து வழக்கமான ஒன்றரை மணி நேர சிவ பூஜையை முடித்து) மெட்ராஸ் சென்று மாலை அங்கிருந்து அதே பஸ்ஸில் திரும்பி இரவு 12 மணியளவில் வீடு வந்து சேருவார்..
அது வரை வீட்டின் திண்ணையில் அமர்ந்தும் அடிக்கொரு தரம் வீதியில் சென்று அவர் வரவை எதிர்பார்த்தும் நிலை கொள்ளாமல் தவித்துக் கொண்டிருப்பேன் . என் தங்கை உறங்கி விடுவாள். எனக்கு அப்போது 9 வயது ..
எதற்காக காத்திருப்பேன் என்றால்.. அவர் அங்கே மெட்ராசிலிருந்து பூக்கடை (பழைய பஸ் ஸ்டாண்ட் -பாரிஸ் கார்னர் அருகில்) அருகிலிருந்து சுவீட் , காரம் , சைனா பஜாரிலிருந்து விளையாட்டு பொருட்கள் (பிளாஸ்டிக் பீரங்கி பொம்மை..என்று என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தி விடக் கூடிய ஏதாவது ஒன்று நிச்சயம் வாங்கி வருவார் .ஒல்லியான உருவம் அசைந்து நடந்து வருவதை பார்த்ததும் "அப்பா" என்று கூவியபடி ஓடி சென்று அவர் கொண்டு வரும் சிறிய கேன்வாஸ் (பச்சை நிற) பையை வாங்கிக் கொண்டு அவருக்கு முன் ஓடி வீட்டுக்கு வந்து விடுவேன்.இரவு ..இரவுதான்..கையில் பொம்மையை வைத்துக் கொண்டே உறங்கிப் போவதும் உண்டு..
இப்படி ..ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே அவர் சென்று வருவதாலும் அது வரையில் நான் பட்டணம் பார்த்திராததாலும், மற்ற சொந்தக்காரர்கள் ஊரெல்லாம் 20 அல்லது 40 கிலோ மீட்டர் தூரமே என்பதாலும் மெட்ராஸ் என்னைப் பொருத்தவரை செவ்வாய்க் கிரகம் போல..

அப்படிப் பட்ட மெட்ராசுக்கு ஒரு தடவையாவது என்னைக் கூப்பிட்டு போக சொல்லி நச்சரிப்பேன்..அவரை.கொஞ்சம் பெரியவனாகட்டும் என்று எண்ணி ஒரு முறை பள்ளிக் கூடத்தில் டூர் போகிறார்கள் அப்பா..மகாபலிபுரம், வேடந்தாங்கல், திருக்கழுகுன்றம் மெட்ராஸ் என்ற போது உடனே போய் வா என்று அனுமதி தந்தார். பணமும் கட்டியாயிற்று. விடியற்காலை எங்கள் வீடு வழி தான் பஸ் போகிறது என்பதால் 3 மணியளவில் வந்து ரோட்டில் நிற்க சொல்லியிருந்தார்கள் .. நன்கு தூங்கி விட்டு அந்த பஸ்ஸை தவற விட்டது என் வாழ்வில் அப்போது பெரிய இடி .. மெட்ராஸ் அப்படி ஒன்றும் சாதாரணமில்லையோ என்று முதன் முதலாக ஒரு அச்சம் ஏற்பட்டது.. போய் விட்டு வந்த பின் என் நண்பர்கள் அளந்த அளப்பு முதன் முதலாக ஓர் தாழ்வு மனப்பான்மையை கூட ஏற்படுத்தி இருந்தது ..
பிறகு அடுத்த வருடம்..போனேன்..நாட்டு எலி நகரத்தில் நுழைந்தது போல்..
இவ்ளோ பெரியா ஊரா..ஏங்கப்பா.. கார்களும் பஸ்களும் (அப்போதெல்லாம் அம்பாசடரும் பியட்டும் மோரீஸ் மைனர், ஹெரால்டு, ப்லைமோத் மட்டுமே தென்படும்) அசுர வேகத்தில் பறந்து கொண்டிருக்கும் மெட்ராஸ்..உலக அதிசயமாக தோன்றும் 14 அடுக்கு மாடி LIC கட்டடம், மவுண்ட் ரோடு (இப்போதை அண்ணா சாலை) மெரீனா பீச் , அப்போதுதான் அறிமுகமாகி இருந்த POPCORN எல்லாமாக சேர்ந்து எனக்குள் மெட்ராஸ் என்பது அடி வயிற்று பயமாக போய் குடி கொண்டது..

அப்புறம்.. கொஞ்ச காலம் கழித்து 17 வயதில் மெட்ராசில் பிக்பாக்கெட் , மூர் மார்கெட் பேரங்கள் ஏமாந்த கதைகள், என்று என் நண்பர்கள் ஏற்படுத்திய பயங்கள் சேர்ந்து கொண்டன..பாரீஸ் கார்னரில் ஒரு ரோட்டுக் கோடையில் செருப்பு ஒன்று வாங்கப் போய் 7 ரூபாய் என்றதும் அப்பாவிடம் கேட்டு வருகிறேன் என்று நகர்ந்ததும் "சாவு கிராக்கி" என்ற பட்டப் பெயர் முதன் முதலில் தேசிய விருது போல் பெற்றதும் தனிக்கதை..

அப்புறம் 3 வது தடவை என்று நினைக்கிறேன்..திருவள்ளுவர் பஸ் ஸ்டாண்டில் இறங்கி விட்டு சென்ட்ரல் ஸ்டேஷன் போக வேண்டும் எப்படி போவது என்று அப்பாவியாக கேட்ட என்னை ஒரு வாலிபன் எகத்தாளமாய் பார்த்து, பஸ்சிலும் போகலாம்..நடந்தும் போகலாம்" என்று சொல்லி விட்டுப் போக எந்த பஸ் எவ்வளவு தூரம் நடக்க வேண்டும் என்று ஒவ்வொருவராக கேட்டு (சொல்லி வைத்தாற்போல் எனக்கென்று வாய்த்தவர்கள் எல்லோருமா விளையாடி இருப்பார்கள்) ஒரு வழியாக போய் சேர்ந்தேன்..இன்னொரு முறை..32 வயதில் .. எக்மோரில் இருந்து வள்ளுவர் கோட்டம் போக பஸ் ரூட் கேட்டு மாறி ஏறி இறக்கி விடப்பட்டு மீண்டு எந்த ஸ்டாப்பில் இறங்க வேண்டும் என்று தவறாக சொன்ன ஒரு ஸ்டாப்பில் இறங்கி ஆட்டோ பிடித்து போனதும் உண்டு.

இன்றைக்கும்..பல மாநிலத்தவரும், பல ஊரினை சேர்ந்தவர்களும் புழங்கும் சென்னை மாநகரம்..என்னைப் பொறுத்த வரை பிரமிப்பு..பயம்..ஆச்சரியம்..புரியாத இடம்..நாகரீகத்தின் உச்சம் ..இன்னும் என்ன வெல்லாமோ..ஏர்போர்ட்டில் இறங்கி டெல்லி, கல்கத்தா, மும்பை என்று எங்கே போவதாக இருந்தாலும் தனியாக மெரினா பீச்சுக்குக் கூட போவதில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்..
டாக்சி..ஆட்டோ ஏறினாள்..ஏதோ லோக்கல் ஆளு போல பாவனை யுடன் மெட்ராஸ் பேச்சு பேசி, நான் ஒண்ணும் மெட்ராசுக்கு புதுசு இல்லையாக்கும் என்று ஏதாவது தத்து பித்து என்று பேசிக் கொண்டு போவதும் உண்டு!

உண்மையில் சென்னை சென்னைதான்..!

எழுதியவர் : கருணா (19-Feb-15, 2:31 pm)
பார்வை : 375

மேலே