வந்தாரை வாழ வைத்தாய்

உறக்கம் கலைத்திடடா தமிழா - ஓர்
உண்மை அறிந்திடடா தமிழா !
மறந்து போனாயோ வீரம் - உன்
மனமும் போனதோ சோரம் !

கிழக்கு வெளுத்திடும் முன்னே - நீ
கிளர்ந்து எழுந்தவன் அன்றோ !
கலங்கி நிற்காதே தமிழா - உன்
கைகள் ஓங்கட்டும் தமிழா !
(உறக்கம்...)

கடலைக் கடந்துமே சென்றாய் - அந்த
கடாரத்தையும் வெற்றி கொண்டாய்!
தடைகளைத் தகர்த்துமே நின்றாய் - இந்த
தரணி முழுதுமே வென்றாய்!

மூத்த குடிஎனப் பிறந்தாய் - தமிழ்
மொழியைப் படைத்துமே சிறந்தாய் !
பூத்தத் தமிழினில் பேச - இன்று
புலம்பித் தவிப்பதேன் நாகூச !
(உறக்கம்...)

முல்லைக்குத் தேரினைக் கொடுத்தாய் - தமிழ்
முடிகாக்கப் போரினைத் தொடுத்தாய் !
பிள்ளையைத் தேர்க்காலில் அரைத்தை - நீதி
பிறழாத தீர்ப்பினையே உரைத்தாய் !

வந்தாரை வாழவும் வைத்தாய் - பெரும்
வளம்கான வழிவகை செய்தாய் !
இந்நாளில் ஏன் அடிமை ஆனாய் - நீ
எழுவது எப்போது வானாய்!
(உறக்கம்...)

எழுதியவர் : தன்முகநம்பி (21-Feb-15, 11:46 am)
பார்வை : 118

மேலே