ஒரு வார்த்தை போதும்

இலக்கிய மேதை லியோ டால்ஸ்டாய் ஒரு நாள் மாஸ்கோ நகர வீதியில் நடந்து சென்று கொண்டு இருந்தார்.அவருக்கு எதிரே வந்தான் ஒரு பிச்சைக்காரன்.அவன் அய்யா எதாவது தருமம் செய்யுங்கள் என்று கூறி பிச்சை கேட்டான்.

ஆனால் அப்போது அவரிடமோ சோதனையாக ஒரு காசு கூட இல்லை. உடனே அந்தப் பிச்சைக்காரனைப் பார்த்து மிகவும் கனிவான குரலில்,

அன்பு சகோதரனே,

உனக்கு உதவி செய்வதற்கு என்னிடம் பணம் எதுவும் இப்போது இல்லையே என்றார்.அவரது வார்த்தையை கேட்ட பிச்சைக்காரன் அவர்மேல் கோபம் கொள்ளவில்லை.

தன் விதியை நொந்து கொள்ளவில்லை.அதற்கு மாறாக முக மலர்ச்சியோடு,நன்றி ஐயா,தாங்கள் போய் வாருங்கள் என்றான்.

அவனது முகப் பூரிப்பைப் பார்த்த டால்ஸ்டாய், நான் உனக்குப் பிச்சை போடவில்லை.ஆனால்,நீ மகிழ்ச்சியோடு எனக்கு நன்றி செலுத்துகிறாயே ?எதற்காக என்று அவனிடம் வியப்பாக கேட்டார்.

ஐயா,

நான் இதுநாள் வரையில் என்னை எல்லோரும் வெறும் பிச்சைக்காரனாக மட்டுமே பார்த்து விரட்டி இருக்கிறார்கள்.

நீங்கள் ஒருவர்தான் என்னை பாசத்தோடு சகோதரனே என்று சொல்லி அன்போடு அழைத்து பரிவாகப் பேசி இருக்கிறீர்கள்.

அந்த அன்பு ஒன்றே போதும்.நீங்கள் என் மீது காட்டிய
இரக்கம் ஒன்றே போதும்,வேறு எந்த உதவிகள் எனக்குத் தேவையில்லை என்று மனமுருகி சொன்னான் அவன்..

ஆம்,நண்பர்களே,

நம் நாவில் இருந்து வரும் ஒரு வார்த்தை போதும் நாம் எப்படிபட்டவர்கள் என்று உலகம் தெரிந்து கொள்ளும்..

ஆயிரம் வீண் வார்த்தைகளைப் பேசுவதைக் காட்டிலும்,
இதம் தரும் அன்பான ஒரு வார்த்தை மேலானது.

பேசும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் பிறருக்கு பயன்தரும் நல்லவையாக இருக்க வேண்டும்.

எழுதியவர் : படித்ததில் பிடித்தது (26-Feb-15, 12:16 pm)
சேர்த்தது : சந்திரா
பார்வை : 131

மேலே