கோட்டான்களின் அலறலில் விடியுமெனது இரவின் பரிதவிப்பு

நீயும் நானும்
ஓடினோம் !
நீ சொர்க்கத்தை
நோக்கியும்
நான் நரகத்தை
நோக்கியும் !

எனக்கான நரகத்தின்
தேர்வு கருவிலேயே
விதிக்கப்பட்டிருக்க வேண்டும் !

உன்
சொர்க்கத்திற்கான
கட்டுமானத்தின் செங்கல்
ஆசீர்வாதங்களால்
அடுக்கப்பட்ட
அதே வேளையில் தான்
என்
பாவத்தின் சுடுசெங்கல்கள்
சாபங்களின் சூளையில்
சுடப்பட்டது தோழனே !

விதியின் கைகளால்
வேண்டா வெறுப்பாக
வீசி எறியப்பட்டயெனது
விதைகள்
கொடும்பாலையில் சிதறியது -
உனது விதைகளோ
பசுமைக் குடிலின்
வெயில்படா பச்சையத்தில்
மிக நேர்த்தியுடன்
ஊன்றப்பட்டது !

கவனிப்பாரற்று
பாறைகளிலும் கற்களிலும்
முட்டிமோதி
ஒரு சொட்டு நீருக்காக
என் கருவிதை
ஏங்கித் தவித்து
கால்நடைகளும் உண்ண
விரும்பா விஷமுட்செடியாய்
வளர்ந்தேன் -
கொழித்துக் கிடக்கும்
உன் நிலத்தில்
பல பேரின் பணிவிடையில்
நீ செழித்தோங்கினாய் !

தவறுகளின் பாதைகள்
விரும்பித் தேர்வு செய்தலன்று
புரிதல்களற்ற
பதின்பருவத்தின்
நுழைவுவாயிலில்
அதீத நெரிசலின் சூழ்நிலையால்
திணிக்கப்பட்டதன்றி
வேறொன்றில்லையென்கிற
போது-
உனக்கு சொர்க்கத்தின்
திறவுகோல் வழங்கப்பட்டது
எனக்கு
சிறைச் சாலையின் விலங்கு
மாட்டப்பட்டது !

குயிலோசையில்
புலருமுனது
அதிகாலைகளுக்குத் தெரியாது
கோட்டான்களின் அலறலில்
விடியுமெனது
இரவின் பரிதவிப்பு !

அசம்பாவிதங்கள்
நிறைந்து போன
அசௌகரியங்களுக்கிடையில்
ஒரே ஓர்
ஆற்றாமையாசை -
எதிர்பார்ப்புகள்
மரித்துதூர்ந்து போனயெனது
கேணியில்
அவ்வப்போது
சொட்டூருமொரு கனவு ....

உனது
சொர்க்கவாசத்தின்
ஒரு நொடியிலேனும்
எனை
நினைத்திருப்பாய் தானே
என் நண்பனே ?

எழுதியவர் : பாலா (27-Feb-15, 8:19 pm)
பார்வை : 126

மேலே