இருளாகப்பட்டது
பின்னிரவுகளில் மின்மினிகள்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
ஆர்ப்பாட்டம் செய்து
பகல் நேரத்து பட்டாம் பூச்சிகளை
சண்டைக்கு அழைக்கின்றன.
அவைகளுக்குள் நடந்த யுத்தத்தில்
அறுபட்ட சிறகுகளையும்
வரிக்கடங்கா வலிகளையும்
தலைப்புச் செய்தியாக்கி
தலைவராகப் பட்டவர்கள்
கடை போட்டார்கள்
கல்லாப் பெட்டி நிரம்பி வழிந்தது .
அந்த பெட்டியில்
குவிந்து கிடக்கும் நாணயத்திற்கு
அல்லாவுமில்லை கர்த்தருமில்லை
அட சிவனுமில்லை எவருமில்லை ....
.ஊடகச் சாலையில்
பிரதி தாள்களுக்கு
கருணைப் போர்வை போர்த்தினாலும்
அவைகள் கருப்பு விபச்சாரத்தையே
கக்கின.
மழைக்காடுகளை அழித்து
சகாராவை வருட குத்தகைக்கு எடுத்து விட்டு
மரம் நடுவிழா நடத்தினார்கள்
மாண்புமிகுகளின் தலைகளில்
மனம் கொதித்த பறவைகளின் எச்சங்கள்.
எந்த கடவுள்களுக்காய்
யுத்தம் செய்யப்பட்டதோ
அவர்கள் வந்து சொல்லும் போது
இவர்களின் ஆயுத தயாரிப்புச் சாலையில்
அந்தி மந்தாரைகள் பூக்கலாம்
அதுவரை-....
அவர்களே
கேள்விக் குறியாக இருக்கும் போது
அதுவும்
கேள்விக்குறியே .
கழுத்தறுபடும் நேரத்தில்
கவிதையொரு கேடாவென்று
கலன் தூக்கி வீசினேன்
அக்காலத்து அற்புதம் போல
அதுவொரு அம்பாக மாறி
அவர்களைக் கொல்லட்டும்.
இனி பிறக்கும் வாரிசுக்கு
பேர் சூட்ட வேண்டாம்
அலை பேசி எண்போல
ஆளுக்கொரு எண்ணிடுவோம்
மனிதன் ஓன்று
மனிதன் இரண்டு என்றே
இருந்து விட்டு போகட்டும் ....
இனி-
இப்ராஹிம் வேண்டாம்
அந்தோணி வேண்டாம்
சிவப்பிரகாசம் வேண்டாம்
சூரிய நாராயணனும் வேண்டாம்.