பேசும் மரம் பேசாத மனிதம்

[ முன்குறிப்பு: தோழர் குமரேசன் கிருஷ்ணன் மகள் வரைந்த ஓவியத்தை பதிவிட்டு இருந்தார். அந்த ஓவியத்தில் உள்ள மரம் என்னிடம் பேசுவதாக தோன்றியது. அதை பார்த்து நான் எழுதிய கவிதை. இது அந்த சிறு குழந்தையின் ஓவியத்திற்கே சமர்ப்பணம் செய்கிறேன்.. ]

நான்
என்மேல் கல்லெறிந்தவனுக்கும்
கனி கொடுக்க தவறியதில்லை...

எந்த
பறவைகளிடமும்
பாரபட்சம் பார்த்ததில்லை...

எப்போதும்
நிற பேதமை பார்த்து
நிழல் கொடுத்ததில்லை...

சுவாசத்தை சுத்தப் படுத்தியதில்
சம பங்கு உண்டு எனக்கு
இருப்பினும்
விசுவாசத்தை எதிர் பார்க்கமுடியுமா
வெட்ட துணிந்தவர்களிடம்?

வெட்டுங்கள் என்னை
ஆனால்
என்மேல் கூடு கட்டி
குடியிருக்கும் குருவிகளுக்கு
என்ன சொல்ல போகிறீர்கள்..?

பிறர் குடியை அழித்தே
பிழைப்பான் மனிதன் என்று
மரத்திற்கு மட்டும்
மறந்து விடுமா என்ன?

என்னை அழித்து உருவான காகிதத்தில்
என்னையே வரைந்து விட்டீர்கள்...
இல்லை
என் சிலுவையில்
என்னையே அறைந்து விட்டீர்கள்...

மின்சார மயானங்களில்
எரியப் போகும் உடல்களுக்கு
மரக்கட்டைகளில் எரியும் மகத்துவம்
புரியவா போகிறது?

எழுதியவர் : ஜின்னா (3-Mar-15, 1:21 am)
பார்வை : 1161

மேலே