யுகம் தாண்டும் சிறகுகள் - சிறகு 1 - கவித்தாசபாபதி

"மெல்லிய கனவுச் சரிகைகளால் பூவேலைப்பாடு செய்யப்பட்டது என் உறக்கம் "

“My sleep had been
Embroidered with
Dim dreams” (John Keets)

உலக மகாகவிகளில் ஒருவரான அழகுக் கவிஞன் ஜான் கீட்ஸின் உறக்கத்தைப் படிக்கும்போதே கண்கள் கிறங்கி இமைக்கதவுகள் மூடத் தவிக்கும் கனவுச் சரிகைகள் பின்ன.

“போனதெலாம் கனவினைப்போல்
புதைந்தழிந்தே போனதினால்
நானும் ஓர் கனவோ -இந்த
ஞாலமும் பொய்தானோ? (பாரதி)

தேசீயக் கனவுகள் கண்ட பாரதியின் ஆன்மீகக் கனவுகளோ மந்திர இழைகளால் பின்னப்பட்டவை ..

கனவுகள்..யாவை? கனவு என்பதே ஒரு கனவோ?

“சொப்னங்ஙளே நிங்ஙள்
சொர்க்க குமாரிகளல்லோ ..
நிங்ஙளிப் பூமியில் இல்லாதிருந்தெங்கில்
நிச்சலம் சூன்யம் ஈலோகம் ..."

என்று கனவுகளைப் பொன்னூஞ்சலிட்டு தாலாட்டும் மலையாள திரைப்பாடலொன்று கனவுகளை விட சுகமானதாய் இருக்கும்.

"கனவுகளே ..காதல் தேவனின் தூதர்களே , என் கண்மணியை இங்கு வரச்சொல்லுங்கள் " என்று ஆணையிட்டு அழைத்து தமிழ்த் திரையில் தன் ராஜப்பாட்டையை திறந்துவைத்த "புதுக்கவிதையின் தேவன்" கவியசு நா. காமராசன் ரசித்து மயங்கிய என் சில கனவுகள் சொர்க்கத்திலிருந்து எனக்கு அனுப்பிவக்கப்பட்டவை.

"விழியே உன்
கதவுகளைச் சாத்து
நான்
கனவுகள் பின்ன வேண்டும். ..

ஆழ்மனப் பறவையின்
சிறகுகளே தூரிகையாக
ஆயிரம் சித்திரங்கள்
எழுத வேண்டும் " (கவித்தா)

"புதிய தூரிகை புதிய சித்திரங்கள் " என்ற உலகளாவிய கனவுகளின் வண்ணம் தொட்டு எழுதிய என் சித்திரக் கவிதையின் வரிகளை நா. காமராசன் தீண்டும் விதமே ஒரு துல்லியமான இசை மீட்டல்...!

"நான் கனவுகள் பின்னவேண்டும் என்னும் வரி 'நான் மனக்கனவுகள் பின்னவேண்டும் என்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும். "நட்சத்திரம் அட்சதைகள் தூவும்" என்று ஒலிக்கும் திரைப்படப் பாடல் "வானம் நட்சத்திர அட்சதைகள் தூவும்" என்றிருந்தால் சிறப்பு! ஷேக்ச்பியரிடம் கூட இத்தகைய சிறுபிழைகள் பதினொன்று இருப்பதாக ஆங்கில விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். ""

நா. காமராசன் மேலும் தன் தூரிகை விரல்களால் என் கனவுகளை வருடுகிறார்.

///குழப்பமில்லாத தெளிவான வெளியீடு கவித்துவத்திற்கு கோபுரமாகிவிடுகிறது . பாருங்கள் இவன் கனவை விதைத்தால் மனிதர்கள் முளைக்கிறார்கள்.

"என்
வெள்ளைக் கனவை
சிந்துவின் கரைகளில்
விதைக்கிறேன்

அங்கே
ஆயுதம் தரிக்காத
பாகிஸ்தானியர்கள்
முளைக்கிறார்கள் " (கவித்தா )

"ஒரு தெய்வமகள் கனவுகள் விற்கிறாள் " ஓர் அற்புதமான படைப்பு. அதில் அரிசியில் வரைந்த சித்திரத்தை மனக்கண்ணால் பார்க்க முடிகிறது .

காஷ்மீரத் தோட்டம் முதல் குமரிக்கடலோரம் வரை சுதந்திரத்தின் செல்வமகள் கூவி கூவி கனவுகள் விற்றுக்கொண்டு வருகிறாள்,

"ஒரு கனவும் விற்கவில்லை
அவள் குரல் கேட்க
யாருமில்லை
ஆனால் அந்தக்
கூவல் மட்டும் ஓயவில்லை
கனவு வாங்கலையோ கனவு?" (கவித்தா )

இந்தியாவின் தேசீய பிரச்சனையெல்லாம் மாநிலங்களின் பிரதேச வெறி கல்லறைக்குள் பிரேத விசாரணைக்கு பார்த்திருப்பதை மௌன சாட்சியங்களாக நாம் பார்த்திருக்கிறோம். //(நா. காமராசன்)

சென்ற வாரம் " கவிஜி " என்னும் இளங்கவிஞனின் "சித்திரத்தூக்கம்" கண்ணில் பட்டது.. . கீட்சுக்கு கனவுகள் சரிகைகள் என்றால் ....கவிஜிக்கு சித்திரங்கள்.

சித்திரத்தூக்கம் ஒரு தீராத மயக்கமாகிவிடும் உங்களுக்கு .. அவன் இரவுக்குள் நுழைந்து பாருங்கள் .

"தூக்கத்திற்குள் நுழைவதில்
மந்திரம் செய்யும்
மயக்க நிலையில்
கனன்று சுழலும்
ஒரு பெரு மூச்சில்
இல்லாமல் போகுது
ஒரு பேரிரைச்சல்..
பலமான காற்றுடன்
பெரிய இடிச்சத்தம்
படக்கென பூக்கும்
பூவின் நாவில் பாட்டெழுதி
போவதை
சேமித்து வைக்கிறது
உயிர் கொண்ட உண்டியல்...
மெல்ல மெல்ல நழுவி
கடலில் விழுந்து விட்ட
ஒரு துளி மழை நீரை
தேடிப்பிடிப்பது போன்று,
கில்லாடியான மீன் ஒன்று
மனமெங்கும்
வலை வீசி துரத்துகிறது...
விடியும் வரை
இல்லாமல் போகும்
உணர்வில் ஒரு கூடை
கனவுகளும்
ஒரு வான தூரங்களும்
படிக்கட்டுகளாய்
பாய் விரித்து
விரிந்து கொண்டே போவதில்
ஆழமாய் ஒரு
சித்திரம் வரையப்படுகிறது,
யாரும் பார்க்க முடியாத படி......" (கவிஜி)


இப்போது நான் ஒரு கையில் கனவுகளைப் பற்றிக்கொண்டு மறு கையில் உங்களைப் பற்றிக்கொண்டு ஒரு மயக்க பூமிக்கு அழைத்துச்செல்கிறேன். ..அது ஒரு ரகசிய தீவு ....

"நீலமாய் நீலமாய்
மிதக்குமிந்த
மயக்க பூமியில்
தரையிறங்கும் தேவதைகள்...

இந்த ரகசியத்தீவில்
சொர்க்கத்தின் பூக்களை இறைத்துவிட்டு
புறப்பட்டுச்சென்ற புஷ்பக விமானங்கள்
தூரத்துப் புள்ளிகளாய்…..

வெண்சிறகாடிவரும்
விண்சொர்க்க பெண்களின்
ஸ்பரிசம் தேடி
விரைந்த கால்கள் சரிந்த இடம்
ஒரு குகையாய்...

இந்த மர்ம குகையில்
மாயச்சிலந்தியின்
வலைப்பின்னல்களும்
பொன் ஜரிகைகளாய்

இங்கு திடுக்கிடும்
பயங்கரமும் அழகுதான்
தீயின் இதழ்களாய்…
திகில்களாய்...

ஜென்ம ஜென்ம
ஞாபகங்களின்
நிழல்களும்
வண்ணங்களாய்….

ஆழ்மனப் பறவையின்
அழகிய சிறகடிப்போ….?

இரவுப்பூவில்
நிரம்பி வழியும்
உறக்க மதுவின்
கிறக்கமோ….?

இறையோவியன்
உதறும் தூரிகையின்
சிதறல்தானோ…?

இல்லை,
நிறைவேறாத எண்ணங்களின்
காலி கிண்ணங்களோ...
எதுவோ...இந்தக் கனவுகள்…?"(கவித்தா )


நிழலுக்கு நிறம் தர கடவுளாலும் இயலாது. எனில் , கவிஞனால் முடிகிறது பாருங்கள்.

"நிழல்களின் நிறங்கள் " என்ற உலக பொதுத்தன்மையுடன் ஆழ்ந்த படைப்பியலும் கொண்ட இந்தக் கனவுக்கவிதை.... என் கனவுகளின் கனவு!

யுகங்கள் நீளும் வரை கனவுகள் நீளும். ..
இந்தக் கவிதைகளும் ...!


(தொடரும்...)

எழுதியவர் : கவித்தாசபாபதி (4-Mar-15, 11:20 pm)
பார்வை : 548

சிறந்த கட்டுரைகள்

மேலே