வலிமிகுதல் அல்லது வலி மிகும் இடங்கள் பகுதி 2
வல்லினம் என்பது பழந்தமிழ் இலக்கணங்களின் அடிப்படையில், தமிழில் உள்ள மெய்யெழுத்துக்களின் மூன்று வகுப்புக்களுள் ஒன்று. க், ச், ட், த், ப், ற் எனும் ஆறு எழுத்துக்களையும் வல்லின எழுத்துக்கள் என்கின்றனர். இவை வலிய ஓசை உடையவையாதலால் இப்பெயர் பெற்றன. இவற்றை வலி, வன்மை, வன்கணம் என்னும் பெயர்களாலும் அழைப்பது உண்டு.
தமிழைப் பிழையின்றி எழுத விரும்புபவர்கள், வல்லின எழுத்துக்கள் மிகும் - மிகா இடங்களை அறிந்து கொள்ள வேண்டும். வல்லின எழுத்து மிகுந்து வருவதையே இலக்கணத்தில் "வலிமிகுதல்' எனப்படும். இரண்டு சொற்கள் இணையும்போது, இடையில் க், ச், த், ப் ஆகிய ஒற்றெழுத்து வந்து இரு சொற்களையும் ஒன்று சேர்த்தால் அதற்கு "வலி மிகுதல்' என்று பெயர்.
வலி மிகுவதால், சொற்களில் பொருள் வேறுபாடு தெரிவதற்கும், பொருளைச் சரியாக உணர்வதற்கும், உச்சரிக்கும் போது தமிழ்மொழிக்கு உரிய இனிய ஓசையை வெளிப்படுத்துவதற்கும் உதவுகிறது.
இலக்கணம் படிக்காதவர்களும் மிக எளிதாக வல்லெழுத்து மிகுதலை அறிந்துகொள்ள கீழே தரப்பட்டுள்ள சில விதிகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஓரெழுத்து ஒருமொழிக்குப் பின் வலி மிகும்.
உதாரணம்:
பூ+பறித்தான் = பூப்பறித்தான்
தீ+பிடித்தது = தீப்பிடித்தது
கை+குழந்தை = கைக்குழந்தை
பூ+பந்தல் = பூப்பந்தல்
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் பின் வலி மிகும்.
உதாரணம்:
அறியா+பிள்ளை = அறியாப்பிள்ளை
காணா+காட்சி = காணாக்காட்சி
சொல்லா+சொல் = சொல்லாச்சொல்
நிலையா+பொருள் = நிலையாப்பொருள்
தீரா+துன்பம் = தீராத்துன்பம்
சொற்கள் க்கு, ச்சு, த்து, ட்டு, ப்பு, ற்று என முடிந்திருந்தால், அச்சொற்களை வன்தொடர்க் குற்றியலுகரச் சொற்கள் என்பர்.
மக்கு, தச்சு, செத்து,
விட்டு, உப்பு, கற்று
ஆகிய சொற்கள் வன்தொடர் குற்றியலுகரச் சொற்கள் ஆகும்.
இத்தகைய சொற்கள் நிலைமொழியாக இருந்து வருமொழி முதலில் க, ச, த, ப என்னும் எழுத்துகள் வந்தால், கட்டாயம் வல்லெழுத்து மிகும்.
உதாரணம்:
மக்குப்பையன், தச்சுத்தொழில், செத்துப்பிழைத்தான்,
விட்டுச்சென்றார், உப்புக்கடை, கற்றுக் கொடுத்தார்,
பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, எதிர்த்துப் பேசினார், விற்றுச்சென்றான்.
அகர ஈற்று வினையெச்சத்தின் பின்னும்,
இகர ஈற்று வினையெச்சத்தின் பின்னும்,
ஆய், போய் என்னும் வினையெச்சங்களின் பின்னும் வல்லெழுத்து மிகும்.
அகர ஈற்று வினையெச்சத்தின் பின் வல்லெழுத்து மிகும்.
உதாரணம்:
வரக்கூறினார், தேடப்போனார்.
இகர ஈற்று வினையெச்சத்தின் பின் வல்லெழுத்து மிகும்.
உதாரணம்:
கூறிச்சென்றார், வாடிப்போயிற்று.
ஆய் - என்னும் வினையெச்சத்தின் பின் வல்லெழுத்து மிகும்.
உதாரணம்:
சொன்னதாய்ச் சொல், வந்ததாய்க் கூறு.
போய் - என்னும் வினையெச்சத்தின் பின் வல்லெழுத்து மிகும்.
உதாரணம்:
போய்ச் சொன்னார், போய்த் தேடினார்.
ஈரொற்று வரும் வழி:
பதினெட்டு மெய்யெழுத்துகளில் ய, ர, ழ என்னும் மூன்று மெய்யெழுத்துகளின் பின் இன்னொரு மெய் (வலி) மிகும்.
உதாரணம்:
காய் காய்க்கும், ஊர்க்குப் போ, நல்வாழ்க்கை.
(முற்றும்)