===+++சத்தியமாய் சொல்கிறேன்+++===
சத்தியமாய் சொல்கிறேன் தலையைத் தொட்டு
சமுதாய மாகிடுச்சி நாற்றம் கெட்டு
புத்தியிலே புரையேறி புழுத்தப் புண்ணில்
சீழுண்ண மொய்க்கிறது ஊழல் ஈக்கள்;
ஆட்சியிலே இருக்கின்ற அரசர் களினால்
அரவங்கள் ஆளாகி நஞ்சை யுமிழ
அறமின்றி அழிகிறதே அன்னை பூமி
அநியாயம் நடக்கிறதே ஐயோ சாமி...
நேராக நிற்கின்ற மரத்தை வெட்டி
பாராளும் மன்றங்கள் பதமாய் கட்டி
சீரற்ற செங்கோலாய் நேர்மை யற்று
கூரற்ற கொள்கையினை கூறு கின்றார்;
நோஞ்சானாய் வாழ்கின்ற ஏழை முதுகில்
எலும்பென்றும் பாராமல் ஏறி கொண்டு
ஆகாயம் செல்வதாய் கனவு கண்டு
அதிகாரம் செய்யுதே ஆளும் கூட்டம்...
ஐய்யய்யோ சாதிக்கு ஆளை வெட்டி
அரளிக்கு உரம்போடும் அவலம் இங்கே,
மதத்திற்கு மகுடங்கள் சூட்டி வைத்து
மானுட எச்சத்தை நீர்க்கச் செய்து
மூடத்தை வளர்க்கின்ற வழமை தனிலே
முன்னேற்ற கதவினை மூடி வைத்து
மூளையில் திரவத்தை ஊற்றுகின்றார்; கேட்டால்
காரணம் கடவுளாய் கதையை சொல்வார்..
அகறாதி செய்கின்ற அரக்கர் களுக்கே; மனித
அகராதி களிதனிலே பொருளு மில்லை
பொறுமைக்கும் வரையுண்டு மறந்தே விட்டுநீ
பிணம் போலே உழல்வதோ ஊழியில்லை;
இனியேனும் உறங்காமல் விழித் தெழுந்து
இருட்டைநீ ஒளிபோலே கிழித் தெரிந்து
தூயதோர் சமுதாயம் படைத்துக் காட்டுப் பல
தியாகிகள் உனக்குண்டு எடுத்துக் காட்டு...!
------------------நிலாசூரியன்.