கற்றது உன்னாலே

அப்பா...
அன்றொரு நாள்
கீழே கண்டெடுத்த
பத்து காசு நாணயத்தை
பள்ளி அலுவலகத்தில்
தந்துவிட்டு வரச் சொன்னீர்கள்..
அன்று நான்
நாணயம் கற்றேன்.. உங்களால்!
ஆத்திரத்தில் அறியாமல் என்னை
அடித்து விட்டு ஓடிய நண்பனை
அழைத்து வரச் சொல்லி
கை கொடுக்க சொன்னீர்கள்!
அன்று நான்
மனித நேயம் கற்றேன் ..உங்களால்!
பல்லெல்லாம் தெரியும்படி
பாசாங்கு செய்தபடி என்னை
புகழ்ந்து பேசியே கெடுக்க
நினைப்போரை அடையாளம் காட்டினீர்கள்..
அன்று நான்..
என் உயரம் அறிகின்ற வித்தை கற்றேன்..உங்களால்..!
கற்றவை கற்ற பின்
நிற்க ஆரம்பித்தபின்
போதும் இனி பிள்ளைக்கு
சொல்லித் தந்ததெல்லாம் ..
இனி புவியிதனில்
அனுபவத்தால் மற்றதெல்லாம்
கற்றிடுவேன் என்று எண்ணி
விட்டுப் பிரிந்தனையோ..
அப்பா..
எத்துனை பிறவி நான்
எடுக்க நேர்ந்தாலுமே
தந்தையை நீ மட்டுமே
வரவேண்டும் என்னுடனே
கேட்பது என் சுய நலமே!