வசந்த காலம்
வசந்த காலம்..
=============
அது...
எடிஷன்
எங்க ஊருக்கு
வராத காலம்..!
கறுப்பு வெள்ளை
தொலைக்காட்சிப் பெட்டி
பட்டிணத்தில்
வந்திறங்கிய காலம்..!
பெளர்ணமி இரவுகள்
அழகாய்
தெரிந்த காலம்..!
குடிசையும் கோபுரமும்
அடிக்கடி
குசலம் விசாரித்த
காலம்..!
பாலா பந்து பிடி,
நிசார் ஓடிப் பிடி என்ற
துவேசமற்ற பாடல்கள்
மனதில்
இடம் பிடித்த காலம்..!
காப்போத்தல்
மண்ணெண்ணைக்கு
கால் கடுக்க
காத்திருந்தாலும்
கலப்படம் இல்லாத
பொற்காலம்..!
குப்பி விளக்கு
மூக்குச் சுவர்களில்
கறுப்பு மை பூசினாலும்
தப்பித் தவறியேனும்
இதயச் சுவர்கள்
கறுப்பாகாத காலம்..!
ஊரார் சொத்தைப்
பிடுங்கி
வயிறு வளர்க்கும் முறை
அறிமுகமாகாத காலம்..!
ஊழல் என்ற சொல்
அகராதியில்
ஏற்றப்படாத
ஏற்றமிகு காலம்,!
மாட்டு வண்டியில்
பயணப்பட்டாலும்
மகிழ்ச்சி குறையா
காலம்
அக்காலம்..!