எது ஹைக்கூ லிமரிக்கு
கவிதை இந்த நொடி வரை பல காலங்களில் பல ஆடைகளைப் போர்த்திக்கொண்டு சமூகக் குளிர் போக்கியாக பரிணாம வளர்ச்சி அடைந்து வருவது நாம் அறிய வேண்டிய ஒன்று...
அறிந்தவர் புதிய யுக்திகளைக் கைக்கொண்டு வருகின்றனர். ஆங்கில மொழியும் பிரெஞ்சு மொழியும் இத்தகைய யுக்திகளுக்கு எப்போதோ அணியமாகி விட்டன...
தத்துவ ரீதியிலான படைப்புகளை மட்டுமே அளித்துவந்த ஜப்பானிய கவிதைகளும் மக்கள் சார்ந்த படைப்புகளாக மாறி மக்கள் படைப்புகளாக அங்கு மாறிவிட்டன.தேநீர் கடைகளிலும் புகைவண்டி நிலையங்களிலும் தொழிற்கூடங்களிலும் மக்கள் பாரம்பரிய தத்துவ ரீதியான படைப்பு முறைகளான ஹைக்கூ , சென்ரியூ ,லிமரைக்கூ போன்றவற்றை மக்கள் தங்களுக்கான பாடுப்பொருட்கள் அடங்கியதாக மாற்றிக்கொண்டனர்...
ஒரு சில பாடுப் பொருள்களைப் பாடாத கவிஞனே இருக்க வாய்ப்பில்லை...
காதலும் ,கழனியும் காலைக்காட்சியும் ,கவின் மலரும், கண்கவர் பட்டாம்பூச்சியும், கன்னியர் அழகும் ..... என தொடாத பாவலர்கள் இல்லை.
ஒரு கவிஞன் என்பவன் உணர்வுகளின் அங்காடி ;உணர்ச்சிகளின் கண்ணாடி-இந்த சமூகம் தனது தேவைகளுக்கு அங்காடிக்குப் போகவேண்டும்...தன் பிம்பம் காண கண்ணாடிப் பார்க்கவேண்டும்.
புதிய மாற்றங்களுக்குத் தன்னை முதலில் உட்புகுத்திக் கொண்டவர் ஈழத்து மகாகவி.!!
லிமரிக் முயற்சியில் நூறு கவிதைகளை 1966 -ல் .இவர் குறும்பா எனும் தலைப்பில் படைத்தார். இந்நூலுக்கு எஸ்.பொன்னுத்துரை முன்னுரை அளித்துள்ளார்.புதிய கவிதைப் பாணிக்கான வழித்தடங்களை பொன்னுத்துரை குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் கோவேந்தன் 1984 -ல் குறும்பா எனும் தலைப்பில் படைத்தார்.இந்நூலுக்கு எனது ஆசிரியர்
ம.லெனின் .தங்கப்பா -(மானுட நேயம்,சமூக நியாயம் ,லஞ்சமற்ற சூழல்...முதலியவற்றை படைப்பாளிகள் மானுடக் கடமையாக மேற்கொள்ள வேண்டுமென சுய வாழ்வின் நெறியாக
தவமாக கைக்கொண்டு வாழ்ந்து வரும் உயர் மனிதர் -தமிழில் எல்லா ஊழியரும்
ஒப்பமிட வேண்டி அதை நடைமுறையாக்காத அரசு தனக்களித்த தமிழ் மாமணி
விருது மற்றும் ரொக்கப் பணத்தையும் திருப்பியளித்தவர்.!! தனக்கு தமிழ்மாமணி; தனது வாரிசுக்கு கலைமாமணி விருது -என "வாங்கிகொள்ளும் ". ''' "இலக்கியவாதிகள் மத்தியில் எழுதுவதை வாழ்வாக்கிக் கொள்வதும் வாழ்வுக்காக எழுதுவதையும் தவமாகக் கொண்டவர் எனது ஆசிரியர்
ம.லெனின்.தங்கப்பா.....இந்த தருணம் எனக்கு ஆசிர்வதிக்கப்பட்ட தருணம்- ம.லெ.த.பற்றி இங்கு பதிவு செய்யும் வாய்ப்பு கிட்டியமைக்காக )
தனது முன்னுரையில் ம.லெ.த ,
"நமது மத்தியில் நிலவும் அரசியல்,சமயம்,இலக்கியம்,திரைப்படம் போன்றத் துறைகளில் காணப்படும் லஞ்ச லாவண்யம், ஒழுக்கமற்ற நிலைப்பாடு குறித்த கணைகள் தொடுக்க நகைச்சுவை உணர்வோடு லிமரிக் பாவினங்கள் பாவலர்களால் படைக்கலாம்" என்றார்.
மகாகவி,கோவேந்தன் வழிபற்றி பலரும் பயணிக்காத நிலையை மாற்றி லிமரிக் மற்றும் ஹைக்கூ கலவையாக லிமரிகூ எனும் வடிவத்தை தமிழில் முதன்முறையாக எனது ஆசான் ஈரோடு தமிழன்பன்
"சென்னிமலைக் கிளியோபாத்ராக்கள்"எனும் தொகுப்பு மூலம்2002 -ல் படைத்தார்...
அவற்றுள் இதோ சில......
"புகைப்பிடித்தால் இறப்பாய் :
மதுகுடித்தால் இறப்பாய்:
இரண்டும் விற்றால் வாழ்வில் சிறப்பாய்!!"
"அடித்தது கொள்ளை லஞ்சம்;
சின்ன வீட்டுஸ் செலவு போக
மனைவி பெற்றது கொஞ்சம்!!"
"முடிந்து போன கதைகள் ;
ஒவ்வொன்றுள்ளும் முளைக்கத் துடிக்கும்
முன்னூறு புதிய விதைகள்.."
"மக்களை மயக்கிய பேச்சு
மயக்கம் தெளிந்தபின்
தென்பட்டதரிதாரப்பூச்சு "
"திண்டுக்கல் பூட்டைத் திறக்க
முடியவில்லை;
திருடன் திருடிப் போனான்
வீட்டை "
பறவையோடு சேர்ந்து பற
சிறகுகள் தேவை இல்லை
மனிதன் என்பதை மட்டும் நீ மற
தலைவர் உடம்பெல்லாம் பொய்தான்
ஊரை அடித்து உலையில் போட்டார்
என்பது மட்டும் மெய்தான்
கவிதை எல்லாம் விற்றான்
கைக்கு வந்த காசைக் கொண்டு
தேமா புளிமா கற்றான்
ஊதுவத்திச் சின்னம்
கட்சி வென்று கோட்டை பிடித்தும்
நாற்றம் போகலை இன்னும்
அண்ணன் மீராவும் (மீ.ராஜேந்திரன் )குக்கூ எனும் வடிவத்தில் புது முயற்சி செய்தார். அண்ணன் மீரா பதிப்புகளையும்(அன்னம் மற்றும் அகரம்), படைப்புகளையும் தொடக்க நிலை படைப்பாளிகள் அவசியம் வாசிக்கவேண்டும்...
தோழமைகள் பலரும் தளத்தில் ஹைக்கூ எனும் பெயரில் படைப்புகளை எழுதும் போது அவை ஹைக்கூ இலக்கணத்தில் வந்துள்ளதா என ஒரு பார்வை பார்த்து பின் பதியலாம். அல்லாவிடின் வெறுமனே பதியலாம்-ஹைக்கூ எனும் பெயரின்றி... கவிதைகள் எதையும் தமிழ் ஏற்றுக்கொள்ளுமே..
ஹைக்கூ என்றால் தமிழகத்தில் கவிஞர்.மு.முருகேசு மிகவும் குறிப்பிடத்தக்கவர்.'இனிய ஹைக்கூ '
எனும் இதழையே ஹைகூவிற்காக நடத்தியவர்....
பல ஹைக்கூ கவிஞர்களை ஒன்றிணைத்தும் நூல்களை வெளியிட்டும் புதுச்சேரியின் சீனு.தமிழ்மணி போன்று ஹைக்கூ வளர்ச்சிக்குப் பாடுபட்டவர்.
ஹைக்கூ இலக்கணம் அறிய இந்நூலை வாசிக்கலாம்.. The haikoo handbook -by William J. Higginson
அமேசான் .காம் மூலம் நூலைப் பெறலாம்.
இன்னும் பேசுவோம்...