அண்மையில் படித்த புத்தகம் வேடிக்கை பார்ப்பவன்கவிஞர் நாமுத்துக்குமார்

அண்மையில் படித்த புத்தகம் : வேடிக்கை பார்ப்பவன்
புத்தக ஆசிரியர் : கவிஞர் நா.முத்துக்குமார்
பதிப்பகம் : விகடன் பிரசுரம்
வெளியிடப்பட்ட ஆண்டு : செப்டம்பர் -2014, மொத்த பக்கங்கள் 240, விலை ரூ 140.

இந்த நூல் ' என் எல்லா கிறுக்குத்தனங்களோடும் என்னைப்பொறுத்துக்கொண்டிருக்கும் மனைவி ஜீவல்ட்சுமிக்கு ' எனக்குறிப்பிட்டிருக்கின்றார். தன்னை 'எல்லா கிறுக்குத்தனங்களோடும் ' என்று விமர்சிக்கும் இந்த மனப்போக்குத்தான் , தன் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வுகளை 'வேடிக்கை பார்ப்பவனாக ' பார்க்கத்தூண்டியதுபோலும். பதிப்புரையில் ' நா.முத்துக்குமார் வித்தியாசமாக வேடிக்கை பார்த்திருக்கிறார். இந்த சமூகத்தில் தன்னைச்சுற்றி நடந்தவற்றை புதிய கோணத்தில் கூர்ந்து பார்த்து அதன் தாக்கத்தை, வலியை, சுகத்தை, இன்பத்தை இந்த நூலில் பகிர்ந்துகொண்டு இருக்கிறார் " என்று கூறியிருப்பது நூலை வாசிக்க, வாசிக்க பொருத்தமாகத்தோன்றுகிறது.
தனது தாய் இறந்த சமயத்தில் தான் அறியாப்பருவத்தில் இருந்ததை " உங்க அம்மா செத்துட்டாங்க... உன்னை கூப்பிட்டுப்போக ஆள் வந்திருக்கு " ...ஸ்கூல் ஆயா வந்து சொன்னபோது ,இவனுக்குச்சந்தோசமாக இருந்தது. மேத்ஸ் ஹோமொர்க்கை இவன் செய்யவில்லை. அடுத்த பீரியடின் அடியில் இருந்து இவன் தப்பித்துக்கொண்டதாக நினைத்தான். இவனை விட்டு தள்ளி நின்று, இவன் வாழ்க்கை இவனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதை இவன் அறியவில்லை. அம்மாவின் பிணம் கிடக்க ,அறியாமல் தான் விளையாடியதையும் . 'எங்க அம்மா தலைல நான் தான் நெருப்பு வச்ச்சேன். ..எப்படி எரிஞ்சுச்சு தெரியுமா ? " என்று பால்ய நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டதையும் வாசிக்கும்போது நம் மனதும் கனக்கிறது.அறியாவயதில் பெற்றோரை இழப்பது பெரும் துயரம் என்பதும் புரிகிறது.

'நட்சத்திரங்களின் தேசம் ' என்று தலைப்புக்கொடுத்து, தனது அப்பாவைப் பற்றிச்சொல்வதற்கு முன் புகழ்பெற்ற எழுத்தாளர் கேப்ரியேல் கார்ஸியோ மார்க்வெஸ் சொன்ன மேற்கோளைச்சுட்டிக்காட்டுகிறார். " என் தகப்பன் எனக்கு எப்படி வாழவேண்டும் என்று நேரடியாகச்சொல்லித் தரவில்லை. அவன் வாழ்ந்தான். அதை உடனிருந்து நான் பார்த்துக்கொண்டிருந்தேன் " என்பதனை சுட்டிவிட்டு, " அம்மா இறந்தபிறகு, இவன் அப்பாவின் கைகளை இறுகப்பற்றிக் கொண்டான். இந்த உலகை பகலில் சூரியன் வழி நடத்துகிறது. இரவில் சந்திரன் வழி நடத்துகிறது. பகலிலும் இரவிலும் வழி நடத்துவது தகப்பனின் கைவிரல்களே என்பதை இவன் அறிந்துகொண்ட காலம் அது. இவன் தந்தையின் விரல்கள், இவனை பல்வேறு திசைகளுக்கு அழைத்துச்சென்றன. இந்த உலகம் இவனுக்கு ஆச்சரியமாக இருந்தது; அதிசயமாக இருந்தது; அதிர்ச்சியாக இருந்தது; அச்சமாக இருந்தது; தன் தந்தையின் கைவிரல்களைப் பற்றியிருந்ததால் , எல்லாமே அனுபவமாக இருந்தது " என்று பக்கம் 29-ல் கவித்துவமான உரை நடையில் தனக்கும் தனது தந்தைக்குமான பாசப்பிணைப்பைப் பட்டியலிடுகின்றார் நா.முத்துக்குமார்.

'கிராமத்தில் முன் ஏர் எப்படிப்போகிறதோ , அப்படித்தான் பின் ஏர் போகும் என்பார்கள்'. தன் வாழ்வின் முன் ஏராய் , தனது தந்தை எப்படி வாழ்ந்தார் என்பதனைச்சொல்கின்றார் நா.முத்துக்குமார். 10-ம்வகுப்பு வரை தானும் தன் தந்தையும் வாழ்ந்தது குடிசை வீடு என்பதையும் தாழ்ப்பாள் இல்லாத குடிசை வீட்டிற்குள் " அந்த அறை முழுக்க மூட்டை மூட்டையாகப் புத்தகங்களை அப்பா குவித்து வைத்திருந்தார். கட்டிலிலும், கட்டிலுக்கு அடியிலும் , அலமாரியிலும் , பரணியிலும் ....கிட்டத்தட்ட ஒரு ல்ட்சம் புத்தகங்கள். வீட்டிற்கு நிறைய சிறு பத்திரிக்கைகள் வரும். எல்லாவற்றிற்கும் இவன் அப்பா சந்தா கட்டி வரவழைத்துக்கொண்டிருந்தார். கணையாழி, கொல்லிப்பாவை, அஃக், கசடதபற.... என பல்வேறு வண்ணங்கள், பல்வேறு விவாதங்களைச்சுமந்து வரும் அந்த இதழ்களை இவன் புரிந்தும் புரியாமலும் படித்துக்கொண்டிருந்தான்." என்று விவரிக்கின்றார். நாமும் கூட வியப்படைகின்றோம். புத்தகங்கள் மீதும் , சில பத்திரிக்கைகள் மீதும் தீராக்காதல் கொண்டிருந்த ஒருவரின் மகனாக வளர்ந்த சூழல், நா.முத்துக்குமார் என்னும் கவிஞரின் வளர்ச்சியின் வேர்த்தளம் என்று புரிந்துகொள்கின்றோம்.

ஒரு நண்பருக்காக பூங்காவில் காத்திருந்தவேளையில் , தன்னைச்சந்தித்த கல்யாணராமன் பற்றியும், அவர் தனக்கு எழுதுவது பற்றிக் கொடுத்த அறிவுரைகள் பற்றியும் முடிவில் இவர் சுந்தரராமசாமி எழுதிய ஒரு கவிதையைச்சொன்னவுடன் இடம் பெயர்ந்து நகர்ந்ததையும் சொல்லும் விதம் நகைச்சுவையாக உள்ளது என்றாலும் இன்றைய எதார்த்தம்.
" உன் கவிதையை நீ எழுது
எழுது உன் காதல்கள் பற்றி கோபங்கள் பற்றி
எழுது உன் ரகசிய ஆசைகள் பற்றி
நீ அர்ப்பணித்துக்கொள்ள விரும்பும் புரட்சி பற்றி எழுது
உன்னை ஏமாற்றும் போலிப்புரட்சியாளர்கள்பற்றி எழுது
சொல்லும் செயலும் முயங்கி நிற்கும் அழகுபற்றி எழுது
நீ போடும் இரட்டை வேடம் பற்றி எழுது
எல்லோரிடமும் காட்ட விரும்பும் அன்பைப்பற்றி எழுது
எவரிடமும் அதைக்காட்ட முடியாமலிருக்கும்
தத்தளிப்பைப்பற்றி எழுது
எழுது உன் கவிதையை நீ எழுது
அதற்கு உனக்கு வக்கில்லையென்றால் ஒன்றுசெய்
உன் கவிதையை நான் ஏன் எழுதவில்லை என்று
என்னைக்கேட்காமலேனும் இரு " என்னும் கவிதை ஈர்ப்பாக உள்ளது. புத்தகம் முழுவதும் இதைப்போன்ற தான் இரசித்த கவிதைகளை, மேற்கோள்களை ஆபரணத்தில் பதியும் முத்துக்களாய் அங்கங்கே பதித்து இருக்கின்றார் நா.முத்துக்குமார்.



தனக்கு +2-வில் இயற்பியல் பாடம் எடுத்த சந்திரசேகர் மாஸ்டரால் இயற்பியலில் விருப்பம் உண்டான கதையை, இயற்பியலில் நல்ல மதிப்பெண் எடுத்து கல்லூரியில் இளம் அறிவியல் இயற்பியல் எடுத்து படித்ததைக் கூறுகின்றார். காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் படித்த காலத்தை விவரிக்கின்றார். " அந்தக் கல்லூரி , பசுமை நிறைந்த நினைவுகளாக , பாடித்திரிந்த பறவைகளாக இவனை அணைத்துக்கொண்டது. இவன் பாடம் படித்தான் . கட்டடித்து , நண்பர்களுடன் படங்கள் பார்த்தான். அவ்வப்போது பெண்கள் கல்லூரிப்பக்கம் ஒதுங்கி, பார்வைகளால் காதலும் செய்தான். கல்லூரிப்பருவம் என்பது , காலம் ஒரு மாணவனைக் கூட்டுப்புழு பருவத்தில் இருந்து வண்ணத்துப்பூச்சியாக மாற்றி வெளியே பறக்கவிடும் பருவம். இவன் சுதந்திரமாகப்பறந்தான்; பதின் வயதுகளின் பூந்தோட்டங்களில் மிதந்தான்; முள்மரங்களில் சிக்கி ,இறகுகள் கிழிந்தான்; மீண்டும் வண்ணங்களைப் பூசிக்கொண்டு வானம் அளந்தான்; கைப்பிடிக்குத் தப்பிப்போன அந்த வண்ணத்துப்பூச்சியின் வண்ணங்கள் , இன்றும் இவன் நெஞ்சுக்குள் கொட்டிக்கிடக்கின்றன " என விவரித்து தன்னுடைய கல்லூரிக்கால நண்பர்களின் பெயர்களையும் குறிப்பிடுகின்றார், கல்லூரியில் தன்னோடு படித்த டி.எஸ்.இராஜராஜனும் , தானும் மாலையில் மரத்தடியில் அமர்ந்து ஒரு தலைப்புக் கொடுத்து கவிதைகளை எழுதியதைக் குறிப்பிடுகின்றார்.

தான் +2 படிக்கும்போது , தனது ஊரான காஞ்சிபுரத்தில் வந்து எடிட்டர் பி.லெனின் தேசிய விருது பெற்ற 'நாக் அவுட் ' படத்தை திரையிட்டதையும் , அவரின் பேச்சு தனது சினிமா பற்றிய பார்வையை மாற்றியதையும் குறிப்பிடுகின்றார். ' திரைத்துறைதான் தன் தொழில் என்று முடிவானதும் இவன் தன் அப்பாவிடம் எப்படிச்சொல்வது என்று பல வாரங்களாக யோசித்துக்கொண்டிருந்தான். இவன் உறவுகளிலிருந்து திரைத்துறையில் சாதித்தவர் யாரென்று பட்டியலிட்டான். அந்தப்பட்டியலில் ஒரேயொரு பெயர்தான் இருந்தது. இவன் பிறப்பதற்கு முன்பே இறந்துவிட்ட அவர், திரைத்துறையில் தன் அடுக்குமொழி வசனங்களில் கோலாச்சினார். தமிழ் சினிமாவை திராவிடக் கொள்கைகளின் பின்னால் திசை திருப்பினார். அரசியலிலும் ஆங்கிலப்புலமையிலும் முன்னுதாரணமாகத் திகழ்ந்தார். அவரது இறுதி ஊர்வலத்தின்போது வரலாறு காணாத அளவு மக்கள் திரண்டார்கள். அவர்தான் பேரறிஞர் அண்ணா. இவன் அம்மா வழியிலும் , அப்பா வழியிலும் பேரறிஞர் அண்ண இவன் உறவினர் " என்று சொல்லும் நூல் ஆசிரியர் அண்ணாவின் மகன் சி.என்.ஏ.பரிமளம் இளவயதில் தன்னுடைய கவிதைகளைக் கேட்டு பாராட்டி உற்சாகப்படுத்தியவர் எனக் குறிப்பிடுகின்றார். சினிமாவில் சேரவேண்டும் என்ற ஆசையை அப்பாவிடம் சொன்னவுடன் , அவரது அப்பா நடிகர் சிவகுமார் எழுதிய 'இது இராஜாபாட்டை அல்ல' என்ற புத்தகத்தைக் கொடுத்ததையும் இரவு முழுவதும் படித்துவிட்டு , நான் சினிமாவிற்குப்போகிறேன் என்று சொல்ல அப்பாவும் அனுமதி கொடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

தான் உதவி இயக்குநராக பணியாற்றிய படங்களை, காலங்களைக் குறிப்பிட்டுள்ளார். நடிக்க சான்ஸ் கேட்டுவந்த , வாழ்ந்து கெட்ட தஞ்சாவூர் குடும்பததைச்சார்ந்த ஒருவரின் கதையை 138, 139 பக்கங்களில் விவரித்துள்ளார். " வாழ்ந்து கெட்ட் வீடுகளில் இருந்து ஒரு வலி, மெள்ளக் கசிந்து காற்றில் பரவி நிலையற்று அலைவதை எப்போதாவது சந்தித்திருக்கிறீர்களா ? கிராமத்தில் வாழ்ந்த சொந்த வீட்டை பூனைகள் உறங்கவும் , அரசமரச்செடிகள் சுவர் வழி வேர்விட்டு, வெடித்துக் கிளம்ப அனுமதித்துவிட்டு மாநகரத்து வீதிகளில் பசியுடன் அலையும் கண்கள் நடு நிசியில் வந்து உங்களை அலைக்கழித்ததுண்டா ? ..... " என வரிசையாகக் கேட்டு அவர் விவரிக்கும்போதே நமக்கும் நமக்குத்தெரிந்த வாழ்ந்து கெட்டவர்களின் வாழ்க்கை அவலங்கள் மனக்கண் முன்னால் விரிகின்றன.

" சினிமா, விநோதமான ஒரு ரங்கராட்டினம். ஆகாயத்துக்கும் பூமிக்குமாக அடிவயிற்றுப்பயத்துடன் சுற்றிக்கொண்டு இருந்தாலும், கீழே வந்து போகும் அந்த ஒரு கணம் , மனதுக்கும் புத்திக்கும் ஏறுவதே இல்லை. நாம் எப்போதும் மேலேதான் இருந்துகொண்டிருக்கிறோம் எனும் மாயத்தோற்றத்தை சினிமா ரங்கராட்டினம் காலம் காலமாக எல்லோர் மனதிலும் தந்து கொண்டிருக்கிறது " என்று சொல்லும் ந.முத்துக்குமார் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் ரங்கராட்டினம் கீழே வந்த கதையை 'முன்பனிக்காலம் ' எனத் தலைப்பிட்டுத்தருகின்றார். " வேலையற்றவனின் பகலும்,நோயாளியின் இரவும் நீளமானவை என்பதை இவன் உணர்ந்த காலம் அது. தூரத்தில் இருந்து பார்க்கையில் தங்க நிலவாகத் தெரிந்த சினிமாவின் மறுபக்கம் வேறுவிதமாக இருந்தது . மஞ்சள் வணணத்தில் தகதகத்த அந்த நிலவின் உள்பக்கம், ஆக்சிஜனற்று, தண்ணீரற்று, பள்ளம் பள்ளமாக இவன் முன் விரிந்தது .' எனக் குறிப்பிட்டு தான் சினிமாவில் வாய்ப்பு கேட்டு அலைந்த கதையைச்சொல்லுகின்றார்.' சிறுகதைக் கதிர் ' என்னும் இதழில் துணை ஆசிரியராகப்பணியாற்றியதை, திரைப்பட இயக்குநர் ஷ்ங்கரிடம் பேட்டி எடுத்ததை வேடிக்கை பார்ப்பவனாகத் தொடர்கின்றார் நா.முத்துக்குமார் இந்தப்புத்தகத்தில்.

என்னுடைய ஞானத்தகப்பனே, என இயக்குநர் பாலுமகேந்திரா பற்றி , அவரின் மறைந்தவுடன் எழுதிய கட்டுரை படிக்கும் எவர் மனதையும் உருக்கும். நா.முத்துக்குமாரின் நன்றி உணர்ச்சியும் படிப்போர்க்கு எளிதில் புரியும். " என் ஞானத்தகப்பனே ! நீங்கள் இருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையில்தானே , என் தகப்பன் ஏழு வருடங்களுக்கு முன்பு என்னை விட்டு விட்டு இறந்துபோனான். நீங்களும் பாதியிலேயே விட்டுவிட்டுப்போனால் , இனி நான் எங்கு செல்வது ? ஒரு கூட்டுப்புழுவாக உங்கள் அலுவலகத்துக்குள் நுழைந்த என்னை, பாட்டுப்புழுவாக மாற்றி, பட்டாம் பூச்சியாகப் பறக்கவிட்டவர் நீங்கள் " என்று ப்க்கம் 166 குறிப்பிடும் நா.முத்துக்குமார் பாலுமகேந்திராவின் தனித்தன்மைகளைக் கூறும் விதமே அழ்கு, அருமை, பெருமை அத்தனையும் ஒன்று இணைந்து தன்மையாக உள்ளது.

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஏ.தமிழ் இலக்கியப்பாடம் எடுத்துப்படித்த நிகழ்வுகளைக் கூறி " ஒரு மாணவன் வேதியியல் படித்தால் , அந்தப்பாடப்புத்தகம் வேதியியலை மட்டும்தான் கற்றுத்தரும். இப்படித்தான் கணிதமும், இயற்பியலும், கணிப்பொறியும், பொறியியலும், மருத்துவமும் அந்தந்தத் துறையைச்சார்ந்த அறிவை மட்டுமே வளர்க்கும். ஆனால் இலக்கியம் மட்டுமே வாழ்க்கையைச்சொல்லிக்கொடுக்கும், சகமனிதர்கள் மீதான் மனித நேயத்தை, தோல்விகளைத் துரத்தும் தன்னம்பிக்கையை, புல் நுனியில் தூங்கும் பனித்துளியின் அழகியலை வேறு எந்தப்பாடம் சொல்லிக்கொடுக்கும் ? இவன் கசிந்துருகிக் காதலித்துத் தமிழ் கற்றான். பக்கம் 179-ல் நா.முத்துக்குமார் தமிழ் இலக்கியம் படிப்பதன் மேன்மையை சொல்லும் விதம் அருமை. " ஒழுங்காப்படிச்சா தமிழ் எவனையும் தெருவுல நிக்கவெக்காது. ஓய்வா இருக்கும்போது வாங்க. நான் ரசிச்ச நூற்றுக்கணக்கான பாடல்களைக் குறிச்சுக் கொடுக்கிறேன். அதைப்புரிஞ்சுகிட்டு மனப்பாடம் பண்ணா மட்டும்போதும்.வாழ்ற வரைக்கும் நீங்க பேசியே பொழச்சிக்கலாம் " என்று அவரின் பேராசிரியர் சொல்வதாக வரும் பகுதியும் எதார்த்தம்.

63-வது ஆளாக பேச்சுப்போட்டியில் மேடையேறி " புறாக்கள் வளர்க்கும் எதிர்வீட்டுக்காரன்; என்னிடம் இருந்து பறிக்கிறான்; பூனை வளர்க்கும் சுதந்திரம் " என்னும் கவிதை பாடி ,முதல் பரிசு பெற்ற கதையை வேடிக்கையாகச்சொல்கின்றார். தொடர்ந்து சென்னை முழுவதும் நடந்த கல்லூரிகளுக்கான கவிதைப்போட்டிகளில் கலந்து கொண்டதுதான், சொன்னவுடன் இன்று கவிதை எழுதுவதற்கான காரணம் என்று குறிப்பிடுகின்றார். ' பச்சையப்பன் கல்லூரியில் இருந்து ஒரு தமிழ் வணக்கம்' நமக்கும் கூட நினைவில் நிற்கிறது இவரின் எழுத்துக்களால். கணையாழி இதழில் வந்த 'தூர்' என்னும் கவிதையையும் அதனை வாசித்த எழுத்தாளர் சுஜாதா பாராட்டியதையும் பெயர் தெரியாத அன்பர் கொடுத்த ஆயிரம் ரூபாயும், அதில் கணையாழி இதழுக்கு நா.முத்துக்குமார் கொடுத்த ரூ ஐநூறும் 'பெள்ர்ணமி 'காலமாய் பதியப்பட்டிருக்கிறது.

தன்னுடைய பேராசிரியர்களும், பேராசிரியர் பெரியார்தாசனும் பாராட்டிய நிகழ்வைப் பகிர்ந்துகொள்கின்றார். தன்னுடைய வளர்ச்சியில் கவிஞர் அறிவுமதி, எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர், பேராசிரியர் வ.ஜெயதேவன், முனைவர் பட்ட ஆய்வு, படைப்புக்கலை பற்றி எம்.ஏ.மாணவர்களுக்கு எடுத்த பாடம், அதனால் கிடைத்த அனுபவங்கள் என விவரித்து முடிவில் 'வீர நடை ' என்னும் திரைப்படத்தில் தான் முதன்முதலில் எழுதிய ' முத்து முத்தாய்ப் பூத்திருக்கும் ' என்னும் பாடல் அதனைப் பாராட்டிய இயுக்குநர் சீமான், இசையமைப்பாளர் தேவா என விவரிக்கின்றார். முடிவில் " சுடலையிலே வேகும்வரை : சூத்திரம் இதுதான் கற்றுப்பார் ! ; உடலை விட்டு வெளியேறி உன்னை நீயே உற்றுப்பார் " என்னும் தன் கவிதையைக்கூறி பனித்துளியின் வாழ்க்கையோடு வாழ்க்கையை ஒப்பிட்டு முடிக்கின்றார். படித்துப்பாருங்கள். புத்தகத்தின் தலைப்பு " வேடிக்கை பார்ப்பவன் " ; ஆசிரியர் : நா.முத்துக்குமார், விகடன் பிரசுரம், செப்டம்பர் 2014, மொத்த பக்கங்கள் 236, விலை ரூ 140.

எழுதியவர் : வா.நேரு (11-Mar-15, 7:15 pm)
பார்வை : 488

மேலே