இது கோட்டோவிய மழலை அல்ல

மழலைகள் பற்றி
ஒரு கவிதை...

அண்ணனின்
குழந்தைகள்
சிறப்பு வகுப்பில்.

பக்கத்து வீட்டு பூஜா குட்டி
ஆங்கிலத்தில் செய்த
இலக்கணப்பிழைக்கு
அம்மாவிடம் அடிவாங்குகிறாள்.

மேல்வீட்டு மோசஸ் பையன்
ஜெடிக்சில் மூழ்கியிருப்பான்
கூப்பிட்டால் அவன் அப்பா
'வெளியே சென்றால்
முட்டியுடைப்பேன்' என்பார்.

அடுத்த தெரு அகஸ்டின்
வருகிறானா பார்ப்போம்.
வீட்டை விட்டு
வெளியே வந்துவிட்டேன்.

நான் ஒரு முட்டாள்.
பாருங்களேன்
கவிதையென்று
நினைத்துக்கொண்டு
உடைத்துடைத்து
கட்டுறை எழுதுகிறேன்.

நான் முட்டாள்
என்பது நிரூபித்துவிட்டேனா?.
போன பத்தியில் கட்டுரைக்கு
எழுத்துப்பிழை.

சவ்வுமிட்டாயையும்
தேன்மிட்டாயையும்
கற்பனையில் சுவைக்க
மனமின்றி தெருவையே
வேடிக்கை பார்க்கிறேன்.

ஓட்டை டவுசரில்
இருந்த சுதந்திரம்
கழுத்தையிறுக்கும்
சீருடை தருவதில்லை போலும்.

மொத்த மழலையையும்
புத்தகப்பையில் பூட்டியவாறு
தலை தொங்கியபடி
நடந்து வருகிறான்
பாலிதீன் பையில்
எதையோ கொறித்துக்கொண்டு.

பக்கத்தில் நெருங்கி
கால்சட்டையை இழுத்து
மொபைல் தாரியா
சப்வே சர்ஃப் ஆடனும்
என்கிறான்.

என் பேனாமுனை
உடையும் முன்பு
மழலைகளை மீட்டுத்
தந்துவிடுங்கள்.

அப்புறம் எழுதுகிறேன்
ஒருநூறு
கோட்டோவிய மழலையை.
--கனா காண்பவன்

எழுதியவர் : கனா காண்பவன் (13-Mar-15, 10:13 pm)
பார்வை : 126

மேலே