கலைந்து போகுதே கல்யாண மேகம்

பாளை விட்ட தென்னைக்குத்தான்
பக்குவங்கள் செய்யுறாங்க...!!!

பூத்துவிட்ட மாமரத்தால்
பூரிச்சுத்தான் போறாங்க...!!!

நானுந்தான் பூத்துப்போய்
வருசந்தான் பலவும் ஆச்சு...!!!

குத்தவச்ச நேரம் இங்க
குச்சு கட்ட மாமன் இல்ல...!!!

சீர் செனத்தி செய்யக்கூட
சொந்த பந்தம் யேதுமில்ல...!!!

பூஞ்சை புடிச்ச காளானாய் நான்
புலம்பித்தான் நிக்கிறனே...!!!

முத்திப்போன கதிராய்
முடங்கித்தான் கிடக்கிறனே...!!!

அரளி விதை அரச்சு குடிச்சி
அப்படியே போலானாலும்,
அதையும் கூட வெட்டிட்டாங்க
ஆடு மாடு மேயுதுன்னு...

வீட்டுப்பக்கம் கூடி வரும்
கல்யாண மேகம் கூட,
வாசப்பக்கம் வருவதுக்குள்
வறுமைப்புயல் அடிச்சு
கலைஞ்சிடுதே...

வந்து போயி இருக்கிறாங்க
வரிசையாதான் மாப்பிள்ளைங்க...

வாக்கப்பட்டு போறாங்க
வசதியான பொண்ணுங்கதான்...

எனக்காக வந்து போகும்
ஒன்றிரண்டும்,

மலையேறி சம்பாதிக்க
மச்சான் தயவு இல்லையின்னும்...!!!

வந்து போயி தங்கிப்போக
வசதி ஒன்னும் இல்லையின்னும்...!!!

சங்கடத்துக்கு அடகு வைக்க
தங்கம் கூட இல்லையின்னும்...!!!

ஆளுக்கொரு குறையச்சொல்லி
வந்த திசை போயிட்டாங்க...

ஆம்பளைங்க படுறாங்க
பரிதாபம், ஆனால்
அர்த்தம் மட்டும் வேற மாதிரி...!!!

காதலிச்சு போலானாலும்
கட்டி வச்சு எரிக்கிறாங்க
கன்னி நானும் என்ன செய்ய?

பூத்திருக்கேன்...காத்திருக்கேன்...
கோலத்தில குத்தி வச்ச பூசணிப்பூவா...!!!

எனக்குன்னு எழுதிவச்ச
புகுந்த வீடு எங்கிருக்கு?

என் கனவ நனவாக்க
கணவனுந்தான் எங்கிருக்கான்...???

எழுதியவர் : சலீம் கான் (சகா) (13-Mar-15, 9:50 pm)
பார்வை : 431

மேலே