தடம் மாற்றிய பண்டிகை பரிசு பெற்ற கதை
சகோதரர் ரூபன் மற்றும் திரு.யாழ்பாவாணன் இணைந்து பொங்கல் திருநாளை முன்னிட்டு நடத்திய சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற சிறுகதை, இதை இங்கு பதியலாமா என்று யோசித்திருந்த வேளையில் இரண்டாம் இடம் பெற்ற திருமதி. சரஸ்வதி ராஜேந்திரன் அம்மா அவர்கள் தனது தளமான இலட்சிய அம்புகளில் பகிர்ந்திருந்தார். கொஞ்சம் வேலைப்பளுவின் காரணமாக எதுவும் எழுதவில்லை... மற்ற பதிவர்களின் பதிவுகளையும் படிக்கவில்லை... என்ற நிலையில் என்னை மறக்காமல் இருக்க இங்கு பகிர்கிறேன்.
சரஸ்வதி ராஜேந்திரன் அம்மா அவர்களின் கதை படிக்க "இங்கு" சொடுக்கவும்.
-------------------------
தீபாவளிக்கு முதல் நாள் தனது நண்பர்களுடன் பாரில் மது அருந்திக் கொண்டிருந்தான் ஷங்கர். போதை ஏறவும் “மாப்ள பத்தாப்பு வரைக்கும் என்னோட படிச்சாடா... இந்தா இப்ப காலேசுல ஒண்ணாத்தான்டா படிக்கிறோம்... எத்தனை தடவை லவ்வைச் சொல்லியிருப்பேன்... எனக்கு எந்தப் பதிலும் சொல்லாம என்னை வெறுப்பேத்துற மாதிரி அந்த முத்துப்பய கூட சிரிச்சுச்சிரிச்சு பேசுறாடா..."
"விடு மாப்ள இந்த பொட்டச்சிங்களே அப்படித்தான்... அழகாயிருந்தா அவளுகளுக்குப் பிடிக்காது...." வாங்கிக் கொடுத்த சரக்குக்காக பேசினான் சுமன்.
அவர்களின் பேச்சில் அவளை வறுத்தெடுத்தார்கள். முடிவில் அவளது வீட்டுக்குப்போய் காதலிக்கிறாயா இல்லையான்னு கேப்பதென முடிவெடுத்தார்கள்.
"டேய்... ஓவராக் குடிச்சிட்டீங்க... எதாயிருந்தாலும் அவ காலேசுக்கு வரும்போது பேசிக்கலாம்... இந்த நேரத்துல ஒரு பொண்ணு வீட்டுக்குப்போயி கத்துறது நல்லதில்லை... அதுவுமில்லாம விடிஞ்சா தீபாவளி, ரெண்டு பேரும் ஒரே தெருவுல இருக்கீங்க... அங்கபோயி எல்லாரு முன்னாலயும் கேவலப்படணுமா? " பீர் மட்டும் குடித்த ஆல்பர்ட் நிதானமாகப் பேசினான்.
"ஆமா... சாமியார் சொல்லிட்டாருடா... இவன் தானும் படுக்க மாட்டான் தள்ளியும் படுக்க மாட்டான்... எப்ப பாரு அட்வைஸ்... “ என்று பாண்டி சொல்ல, எல்லாரும் சேர்ந்து சிரித்தனர்.
"இல்லடா அவன் சொல்றதையும் யோசிக்கணும்... வேற ஏதாச்சும் ஐடியா சொல்லுங்கடா..." என்ற ஷங்கர் சிகரெட்டை பற்ற வைத்தான்.
அதை வாங்கி இழுத்தபடி "அவ மொபைல் நம்பர் இருக்குல்ல... அதுல கூப்பிட்டு பேசுவோம்டா..." என்றான் சுமன்.
"மாப்ள... செல் நம்பர் எதுக்குடா... வீட்டு நம்பரே இருக்கு... இந்தா பேசு..."
"இப்ப நான் சொன்னா நீங்க கேக்குற நிலமையில இல்லை... உன்னோட போனில் இருந்து பேசி ஏதாவது பிரச்சினையாகி போலீசுக்குப் போனா டிரேஸ் பண்ணி வீட்ல வந்து நிப்பானுக... பேசு.. எதாவது லோக்கல் பூத்ல இருந்து பேசு..." என்றான் ஆல்பர்ட்
"மாப்ள... மாமூ சொல்றதுதான் சரி...? வாடா காயின்போன்ல பேசுவோம்..."
"நீ பேச வேணாம்... நான் பேசுறேன்..." என்றான் சுமன்.
எதிர்முனையில் கரகரப்பாய் ஒரு ஆண் குரல்.
"தீபாவைக் கூப்பிடுங்க..."
"நீங்க...?"
"அவ பிரண்ட்ஸ்..."
"இந்த நேரத்துல பிரண்ட்ஸ்க்கு என்ன வேலை...?"
"என்னய்யா நீ... அவகிட்ட ஒண்ணு கேக்கணும்.. கூப்பிடுன்னா கூப்பிடுவியா... கிராஸ்கேள்வி கேக்குறே...?" உள்ளே போயிருந்த சரக்கு வேலைசெய்தது.
"ஏய் எவன்டா நீ... போலீசுல புடிச்சிக்கொடுத்துருவேன்..."
"என்ன மிரட்டுறே... கோத்தா நேர்ல வந்தேன்... மவனே பொழந்துருவேன்...?"
‘டேய் வேணான்டா’ என சைகைகாட்டிய ஷங்கரை அடக்கிய சுமன் " போ... போலீசுக்கு போ யாருக்கு கேவலம்... அங்க வந்து இவன் எல்லாம் பண்ணிட்டான் வேணுமின்னா செக்கப் பண்ணச் சொல்லுங்கன்னு சொன்னா... யாருக்குய்யா கேவலம்...?. முதல்ல உம்பொண்ணைக் கேளு..." கத்திவிட்டு போனை வைத்தான்.
"டேய் என்னடா இப்படி பேசிட்டே...?“
"அந்தாளு ரொம்பப்பேசுறான்... என்ன நெனச்சிக்கிட்டான்... இப்ப மககிட்ட நோண்டிநோண்டிக் கேப்பான்... காலேசுல அவகிட்ட நல்லவன் மாதிரி பேசி கவுத்துடலாம்."
தீபா வீட்டில் எழுந்த அழுகுரலோடு விடிந்தது தீபாவளிக்காலை. தெருவே அங்குதான் நின்றது. ‘ராத்திரி யாரோ இவளைப்பத்தி போனில் தப்பாப்பேசியிருக்காங்க... உடனே பெத்தவங்க அவளைப்போட்டு டார்ச்சர் பண்ணி யாருடி அவன்... அவன்கூட படுத்தது உண்மையான்னு கேட்டு அடிச்சிருக்காங்க... மானஸ்தி பொறுக்கமுடியாம தூக்கை மாட்டிக்கிட்டா... எந்தப் பொறம்போக்கோ தண்ணியப்போட்டுட்டுப் பேசி, ஒரு வயசுப்புள்ளையோட வாழ்க்கையை அழிச்சிட்டான்... அந்த பொறம்போக்கு நல்லாவே இருக்கமாட்டான்... வெளங்காமப் போயிருவான்...’ என தெருவாசிகள் பேசிச்செல்ல, ஷங்கர் இடிந்து போய் உக்கார்ந்து விட்டான்.
‘இவன் வீட்டுக்கு ஒரே பையன்.. எங்க தெருவுல ஒரு புள்ளையை விரும்பியிருக்கான்... அவளை எவனோ ஒருத்தன் கேவலமாப் பேச தற்கொலை பண்ணிக்கிட்டா... அன்னைக்கு பித்துப்பிடிச்ச மாதிரி ஆனவந்தான் இன்னும் தெளியலை... பைத்தியமாயிட்டான். அந்த வருஷத் தீபாவளி ரெண்டு குடும்பத்தோட வாழ்க்கையை புரட்டிப் போட்டிருச்சு... அத்தோட அவங்க சந்தோஷமும் போயிருச்சு...’ என அவனைக் கடந்த இரண்டு பெண்கள் பேசிக்கொண்டுபோக, எதையோ பார்த்துச் சிரித்தபடி தலையைச் சொறிந்துகொண்டு வானத்தைப் பார்த்துச் சிரித்தவனை அவனின் அம்மா வீட்டுக்குள் இழுத்துச்சென்றாள்.
-'பரிவை' சே.குமார்.