இன்றும் பட்டினியா
பச்சிளம் குழந்தையின்
பசி தீர்க்க வேணுமென்று
பத்துப் பாத்திரம் தேய்த்தே
பாதி தேய்ந்து போனது கரங்கள் .
கட்டிலோடு ஒட்டிக்கொண்ட முதலாளியம்மாவின்
மலசலம் அகற்றும் போதே
மனதும் மரணித்துப் போகின்றது .
பகலெல்லாம்
மாளிகையில் வேலை கொடுடி பணத்தை பறித்தெடுக்கும்
பதியின் முன் யாசகம் கேட்கின்றது
விழிகள் .
அம்மா பசிக்கிது
அழுதிடும் குழந்தைகளுக்கு
அப்பா வரட்டும் அன்னம்
உண்ணலாம்
ஆறுதலோடு எதிர்பார்க்கின்றது வயிறு .
அடியேய்....
குடிகார தந்தையின்
மிரட்டலில் அடங்கி
'அம்மா இன்றும் பட்டினியா .?
கண்ணீரில் குளிக்கின்றது தாய்மை .!!