காத்திருக்கும் பச்சை கிளியே

காத்திருக்கும் பச்சை கிளியே!!!.

உனக்குத்தான் எத்தனை ஏற்றம்.
பாவையர் தலைவி கோதையின் தோளேறி
அவள் வாய் மொழியும் கண்ணன்
திரு நாமங்களையும்,
பாவையர் பாடும் அரையர்
கூத்தினைப் பார்க்கவும்,
கோதை சூடிக்கொடுத்த மாலையின்
வாசம் அனுபவிக்கவும்,
ரங்கனுக்கும் அவளுக்கும் ரகசியத்
தூது செல்லவும் நீ செய்த தவம்
நான் செய்யவில்லையே !!!!!

பச்சைக்கிளியே, தினம் தினம்
பிறக்கும் புதுக்கிளியே
நீ என்றென்றும் வாழ்க.
உன்னைத் தோளில் ஏந்திய
நோன்புப்பாவை வாழி.
அவள் கைத்தலம் பற்றிய மன்னன் கோவிந்தனும் வாழி.
திருப்பாவை முப்பதையும் நாங்கள் பாட எங்களுக்கு நல் எண்ணமும்,
நல் மொழியும்,இந்த திவ்ய தம்பதியினரின் தரிசனம் கிடைக்க குறையற்ற விழிகளும்,
நல்மொழிகள் கேட்கும்படி செவிகளும்
வேண்டி நமஸ்கரிக்கிறோம்.

எழுதியவர் : பந்தார்விரலி (20-Mar-15, 3:10 pm)
பார்வை : 141

மேலே