என்றாவது எப்படியாவது சொல்லிவிட

என் இமைகளுக்கும்
உன் இதயத்துக்குமான
இடைவெளியை காதலால்
நிரப்பிவிட்டு செல்கிறது
உன் கடைக்கண்
பார்வை!

நடைபயிற்சி போல
மெல்ல துடிக்கும்
என் இதயத்தில்
இப்போது ஓட்டபந்தயம்
நீ என்னை கடந்து
செல்லும் போது

உன்னை பார்த்ததும்
எனக்குள் எல்லாம்
பூக்க தொடங்குகிறது
நான் மீண்டும்
பிறக்கிறேன் உன்னவளாய்

இதழின் புன்னகையும்
இதயத்தின் துள்ளலும்
இமைகளின் படபடப்பும்
ஹார்மோன்களின் நடனமும்
அதிகமாகி கொண்டிருக்க
ஏனோ வார்த்தைகள்
மட்டும் மவுனத்துக்குள்
சிறைபட்டு போகிறது

அசைந்து ஆடும்
உன் கூந்தலுக்குள்
வந்து அடைபட்டுகொள்ள
விரும்புகிறது என்
குட்டி கனவுகள்

ஒளித்து பார்க்கும்
உன் விழிகளுக்குள்
வந்து ஒளிந்துகொள்ள
ஆசை கொள்கிறது
என் விழிகள்

தவித்து கொண்டிருக்கும்
என் இதயத்தை
கொண்டு சேர்க்க
வேண்டும் உன்
இதயத்தோடு கொஞ்சம்
அப்பிடியேனும் அமைதியுறட்டும்

என் காகிதங்களின்
கவிதை கிறுக்கல்கள்
உன் அலமாரியை
தேடி அலைந்துகொண்டிருக்கிறது

உன்னை கண்டால்
அச்சத்தில் வீணை
வாசிக்கும் விரல்கள்
உன் கைபிடிக்குள்
சிறைப்பட காத்தபடி

உன்னிடம் பேசாமல்
மவுனம் பரிமாறும்
என் இதழ்கள்
பேராசையோடு காத்திருக்குது
நீ என்றோ பதிக்கபோகும்
அந்த முத்தத்திற்காக

உன்னை கடந்து செல்லும்
ஒவ்வொரு தருணத்திலும்
என் இதழ்கள்
சொல்லாத வார்த்தைகள்
எல்லாம் பெருமூச்சாய்
வர தொடங்குகிறது
உன்னை நோக்கி
என் காதலை சுமந்தபடி

நகரவே விருப்பமில்லாமல்
அங்கிருந்து நகர்கிறது
என் கால்கள்
ஏன் என் இதயமும்....

என்றாவது ஒருநாள்
உன் விரல் பிடித்து
இல்லை
உன் தோள் சாய்ந்து
இல்லை
ஒரு காகிதத்தில் கிறுக்கி
இல்லை
ஒரு குறுஞ்செய்தி மூலமாக
இல்லை
ஒரு தொலைபேசி உரையாடலாக
இல்லை
நேராக உன் விழி பார்த்து
இப்படி எப்படியாவது
காதலை சொல்லிவிடும்
நம்பிக்கையில் நகர ஆரம்பிக்கிறது
என் கனவுகள்

எழுதியவர் : யாழினி (21-Mar-15, 2:41 am)
சேர்த்தது : யாழினி வ
பார்வை : 128

மேலே