அம்மா

உதிரத்தில் ஓவியமாய்
எனை வரைந்தாய்!
உனக்குள் எனைக் காத்துக்கொண்டாய்!
கருவில் எனைச் சுமக்கையில் கனவுகளையும் சுமந்துகொண்டாய்
நயவஞ்சகம் கலந்த உலகமிது
உள்ளேயே இரு என்றாய்

கேட்காத நான் உதைத்தேன்
வலி தந்து கொடியறுத்துப்
பிரிந்து உயிர்பிறந்தேன்!
வந்தது வந்துவிட்டாய் வாழ்ந்துவிட்டுப் போ
என்றில்லாமல்
பாலூட்டித்தாலாட்டி
தூங்க மடிதந்தாய்,
வறுமையில் இருந்தாலும்
வந்ததையெல்லாம் கேட்டபோது
வாடா மகனே என்று அழைத்துச்சென்று வாங்கித்தந்தாய்

தவறேதும் இழைத்துவிட்டால் வலிக்க வலிக்க அடிதந்தாய்
என்வலி தீர்ந்தபின்னும் தீராத வலிகொண்டாய்
அடிகொடுத்த இடத்தில்நீ தடவிய எண்ணையில் சேர்ந்தே வழிந்தது உன் அன்பு

வானுயரப்பறக்கும் நிலை வந்தபின்னும் நிலைபெற்ற அன்பால் எனை அடைகாத்துக்கொண்டாய்
என்னுலகம் எதுவாயினும் உன்னுலகம் நானாகக்கொண்டாய்
உன் அன்பிற்கு இணையிங்கு ஏதுமில்லை
உனைவிட எனக்கிங்கு
உறவேதுமில்லை

அம்மா
மீண்டும் ஒருமுறை
உன் கருவறை வேண்டும்
தெருவரை வந்தெனையனுப்பும் அன்பினை உயிர்வரை மறவேன்......

எழுதியவர் : த.கோபாலகிருட்டிணன் (23-Mar-15, 10:06 pm)
சேர்த்தது : கோபாலகிருட்டிணன்
Tanglish : amma
பார்வை : 185

மேலே