நீ மட்டுமே நகல் -ரகு

நனைந்து நடுங்கியபடி
அவசர அவசரமாய்
உன்னை வாங்கிக்கொண்டு
தெருவில் இறங்கிய
அந்த அடைமழை நாள்
அவ்வளவு அழகு

உன்னை மீறிய
சாரல்கள் சிறகு விரிக்கும்
மேனியெங்கும்

ஜன்னல் காற்றில்
அவிழ்ந்து வந்த
கவிதைக்கும் ஒருநாள்
உன்னைப் பரப்பி
விளக்கு வெளிச்சங்கள்
மறைத்த இரவு
நிழலாடுகிறது இன்னும்
நினைவுள்

மறக்காமல் உன்னைப்
பத்திரப் படுத்தியிருக்கிறேன்
கைக்குட்டை மறந்துவிடும்
நாளில் கூட

உன்னைத் தொலைத்த
அந்த நாள் மிக ரணமானது
என் அலுவலக அதிகாரியின்
வக்கிரம் அரங்கேறிய நாள்

தப்பித்து
வெளியேறும்போது கூட
உன்னை இறுகப்
பற்றிக் கொண்டுதான்
ஆறுதலானேன்

உன்னைப் போலவே
மற்றுமொன்றை
கைகளில் ஏந்திய போதும்
வெயில் நிஜம்
மழை நிஜம்
நீ மட்டுமே நகல் என்று
தோன்றுகிறது

இருந்தும்
என் கொலுசுச் சத்தங்கள்
அடங்குகிற நிசப்தத்தில்
அரங்கேறும் கனவுகளுக்குள்
பரவும் நிழல்

என்றும் உனதானது
என்றும் உனதானது

என் இனியக் குடையே !

எழுதியவர் : அ.ரகு (25-Mar-15, 8:06 am)
பார்வை : 459

மேலே