காதலின் சுவாசம்
தனது சுயங்களின் முகவரிகளை
முத்திரையிடா வெற்றுறைகளில்
வீராப்பாய் கிறுக்கிவிட்டு
வெற்றுச்சுவர்களை தபால்
பெட்டியாக்கிவிடுவதில் தொடங்குகிறது
காதல் என்னும்
கடிதத்தின் பயணம்!
ஆதாமையும் ஏவாளையும் குலசாமி
குடிகளாய் பூஜித்து
சலிமின் சமர்ப்பணத்தையோ
அணார்கலியின் அர்ப்பணிப்பையோ
அச்சடித்ததாக அரிதாரம்
பூசிக்கொள்ளும் பூரிப்பில்
புளகாகித பேறடையும்!
கனவுக் காகிதங்களில்
கால்நூற்றாண்டு கடந்து
உவமைகளின் உச்சரிப்பில்
உயரந்து போகும்
ஒப்பனைக் குடில்களாக
ஒராயிரம் ஜோடிகளின்
உலகம் உருளுகிறது!
ஏதோ ஒரு வினோத
உலகின் வாசம்
சுமந்து சின்னச்
சின்ன சிந்தனைகளில்
சிற்பியாகவும் முரட்டு
மந்தைகளில் மேய்ப்பர்களாக
மாறுவது காதலர்களே!
கன்னித்தீவின் கற்பனை சுவர்களை
கால்நகத்தால் நகர்த்தவும்
கொலிசியத்தின் கோபுரத்தை
கோரைப்புல்லால் தகர்க்கவும்
பாபிலோனின் தூண்களில்
மறைந்து பாட்டிசைக்கவும்
முடிந்தவர்கள் முட்டாள்களா??
உமது வடுக்களில் என்றாவது
வரலாற்றின் நேசம்
சிந்தியதுண்டா? உமது
தெருக்களில் என்றாவாது
குருதிகளின் வாசம் வீசியது
உண்டா? திரும்பிப்பாருங்கள்
காதலின் கல்லறைகளை!
காதலின் கரிக்கோட்டில் இருவரிகள்
மட்டும் கிறுக்கப்படுவதில்லை!
உணர்வுகளின் ஒளிக்கற்றையில்
உனக்காகவும் எனக்காகவும்
ஒப்பந்தம் செய்துகொள்ளும்
ஒருஜோடி பந்தங்களின்
பரிசளிப்பும் பரிதவிப்பும்!
நசுக்கப்படும் உயிர்களின் ஓலம்
ஓரிரு நிமிடங்களே!
முறிக்கப்படும் உறவின்
வேகம் ஓரிரு
நிமிடங்களே! பறிக்கப்படும்
காதலின் சுவாசம்
பிரபஞ்சம் உள்ளமட்டும்!
பிரபஞ்சம் உள்ளமட்டும்!!