முகையவிழ்கும் முயற்சி

காலங்கள் செய்யும் கோலங்கள் என்று
==கண்ணீர் சொரியும் மேகங்க லாகும்
சீலங்கள் வளர்த்து சிதைகின்ற வாழ்வு.
==சிறப்புற நிமிர்ந்த நடைபோட வேண்டும்
ஓலங்கள் கொண்டு உயிர்வாழும் நாட்கள்
==உழைப்ப தனாலே உயர்ந்திங்கு ஓங்க
பாலங்கள் போடும் பணிசெய்யும் போது
==பாமரன் வீட்டின் பக்கம்வரும் வசந்தம்.
இல்லாத ஒன்றை எதிர்பார்த்து பார்த்து
==ஏங்கும் நிலைக்கு விடைசொல்லி விட்டு
கல்லாத தென்னும் கடுமுழைப்புக் கல்வி
==கற்றிடத் துணியும் கைகளிலே வந்து
நில்லாத செல்வம் நிலையாக நின்று
==நினைத்ததை எல்லாம் நிறைவேற்றி வைத்து
அல்லல்கள் நீக்கி ஆனந்தம் காட்டும்.
==ஆகவே உழைப்பை அனுதினமும் நேசி.
சிந்துகிற வியர்வை துளிக்குள்ளே உந்தன்
==சிந்தனை கேட்கும் கேள்விக்கு விடைகள்
பந்தியிலே குந்த பரிமாறும் சோறாய்
==பரிசாகக் கிட்டும் பலனைநீ உணர்ந்து
புந்தியிலே தோன்றும் புரட்சிமிகு கனவின்
==புதுமை வித்தை புதைத்துவிடு மண்ணில்
முந்திவரும் அரும்பாய் முன்னேற்றம் உந்தன்
==முயற்சிக் கைகூட முகையவிழ்க்கும் பார்பார்!
*மெய்யன் நடராஜ்