இனி நீங்களும் அறிவாளிகள்தான்
தனது மனைவி மரகதத்தை
மலடி என்று சொல்லி
ஊர்த் தலைவர்கள் தலமையில்
விவாகாரத்து செய்தான் கருப்பன்.
இப்படி செய்வது அநியாயம்
பெண்ணியத்தை
இழிவு செய்யும் செயல் என்றேன்.
அட முட்டாப்பயலே
மலடியை வச்சிக்கிட்டு அவன்
என்ன பண்ணுவான்;
பேர் சொல்ல அவனுக்குன்னு
ஒரு வாரிசு வேண்டாமா? என்று
ஒரு பஞ்சாயத்துக் கிழவன் சொல்ல...
போன ஜென்மத்துல என்ன
பாவம் செஞ்சாளோ..,
இந்த ஜென்மத்துல ஆண்டவன்
மலடியா படச்சிபுட்டான் என்றான்
இன்னொரு பஞ்சாயத்துக் காரன்.
என்ன செய்வது, இவர்களெல்லாம்
அறிவாளிகளாச்சே இப்படித்தான் பேசுவார்கள்.
மூக்கன்வீட்டு முருங்கைமரம்
காய்ப்பதே இல்லையென்று
முந்தாநாள் வெட்டியபொழுது
ஏதாவது கேட்டிருந்தால்
அவன்வீட்டு மரம் அவன் வெட்டுறான்
உன் வேலையை பார்த்துகிட்டு
போ என்றுதான் சொல்லியிருப்பார்கள்.
மயில்சாமிவீட்டு மாடு
சினைப்பிடிக்கவில்லை என்று
போனவாரம் அடிமாடாக விட்டபோது
ஏதாவது கேட்டிருந்தால்;
ரொம்ப அறிவாளித்தனமா பேசுறியோ,,,,
மலட்டு மாட்டிற்கு தீனிபோட்டு
யாருக்கென்ன லாபம்
என்றேதான் சொல்லி இருப்பார்கள்.
போனமாசம் ஆடு
மேய்த்துக் கொண்டிருந்த அலமேலுக்கு
திடீர்னு பிரசவ வலிவர..
அண்ட வழியில்லாமல், அவள்,
அய்யனார்கோயில் தாழ்வாரத்தில்
பிள்ளையைப்பெற்றுவிட...,
தாழ்ந்த சாதிக்காரி இங்கே
பிளையப்பெற்றது குற்றமென்றும்
தீட்டு என்றும், அவளையும் அந்த
பிஞ்சு குழந்தையையும்
ஊரைவிட்டே விரட்டியதும்கூட
இங்கே பஞ்சாயத்து நீதிதான்.
ஆம்...! இவர்களின் தீர்ப்புகளுக்குப் பின்னால்தான்
ஏதோ ஒரு கடவுள்
ஒளிந்துகொண்டே இருப்பதாக தெரிகிறது.
இந்த சமூகத்திலே நீங்களும்
அறிவோடும் அந்தஸ்தோடும் வாழ
வேண்டுமானால், அதற்கு நீங்கள்
செய்யவேண்டிய விடயங்கள்
சில இருக்கின்றன...
இயற்கைதான் கடவுள் என்பார்கள்
ஆம், என்று ஆமோதியுங்கள்
காற்றைப்போலதான் கடவுள் என்பார்கள்
கைகூப்பி ஏற்றுக் கொள்ளுங்கள்
ஏழு ஜென்மம் என்பார்கள்
தலையாட்டி ஒப்புக் கொள்ளுங்கள்
பூஜை
புனஸ்காரம்
பூர்வ ஜென்மம்
கர்மம்
பரிகாரம்
பிராத்தனை
என்றெல்லாம் கதைப்பார்கள்
காதுகொடுத்து ''ம்ம்''... சொல்லுங்கள்
பத்து அவதாரம்
நான்கு வர்ணம்
என்றெல்லாம் சொல்லுவார்கள்,
அப்படியா...? என்று ஆச்சரியப்படுங்கள்
ஓஹோ...! என்று நெகிழ்ந்து போங்கள்
ஆஹா...! பிரமாதம் என்று போற்றிப் பாடுங்கள்
இனி நீங்களும்
அறிவாளிகள்தான்,
உயர்ந்தவர்கள்தான்.
----------------------நிலாசூரியன்.