உறவுறுதி தரமறுத்து போனவள்

சின்னஞ்சிறு செண்பகப்பூ சிரிப்புதிர்த்துப் போனாள்
==சிந்தையிலே தேனள்ளித் தெளித்துவிட்டுப் போனாள்
சன்னமிடும் பார்வைகளால் சரித்துவிட்டுப் போனாள்
==சந்திரனின் குறையழகு நுதலெடுத்துப் போனாள்
கன்னக்குழி அழகினிலே கவிதையாகிப் போனாள்
==கந்தர்வ மணமுடிக்க கனவுதந்து போனாள்
முன்னழகாய் பர்வதங்கள் முகிழ்த்திருக்கப் போனாள்
==முகவடிவின் தாமரையை முகையவிழ்த்துப் போனாள்

மின்னலினால் இடைஎடுத்த அதிசயமாய் போனாள்
==மின்மினியாய் இமையிரண்டும் படபடத்துப் போனாள்
பின்னழகில் தங்கரதம் போலசைந்து போனாள்
==பின்னல்சடை காற்றினிலே ஆடவிட்டுப் போனாள்
புன்னகையில் முத்தினத்தின் புகழ்பரப்பிப் போனாள்
==புகைக்கின்ற மனசுக்குள் எரிபொருளாய் ஆனாள்
தன்னடக்கந் தனைபோர்த்தி தண்ணிலவாய் போனாள்
==தவிப்பதற்கே காதலெனும் தத்துவமாய் போனாள்

கன்னல்தரும் சாறெடுத்து இதழ்தடவி போனாள்
==கண்ணியத்தின் பேர்சொல்ல காலெடுத்து போனாள்
அன்னமெனக் நடைபயின்று அன்னவளும் போனாள்
==அங்கமதில் தங்கமுலாம் பூசியவள் போனாள்
இன்னமுத வாக்கொன்று பகராமல் போனாள்
==இயலிசையும் நாடகமாய் ஈர்த்தெடுத்துப் போனாள்
உன்னதமாய் ஒருநொடியில் உயிர்பிடுங்கிப் போனாள்
==உறவேனவே வருமுறுதி தரமறுத்து போனாள்

மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (5-Apr-15, 2:14 am)
பார்வை : 96

மேலே