ஒரு மின்னலின் நகர்வலம்

அழகிய மதியாய்
ஒரு சாலையோர சந்திப்பில்
வாகன நேரிசல்களிடையே
மின்னலென நீ ஒளிர்ந்து
கண்களால் கடந்து போனாய்
பேசத்தெரியாத என் மனம்
பின்னலடித்தது...


அதன் பின்வந்த
இரவுகள் கலைந்தன
என் இருப்பு குலைந்தது
நிலா என் நெஞ்சுக்குள் எறித்தது
நட்சத்திர மீன்கள்
என் விழிகளில் நீந்தின

இதயத்தில் வேர்பிடிக்க
கவிதைகளாய் பூக்கள்
ஒவ்வொரு சொல்லிலும் பூத்து
மேசையில் கிடந்த காகிதங்களில்
மலர்ந்தன

இயற்கையின் இயக்கங்களெல்லாம்
எனக்கென்றே எண்ணினேன்
உலகிலிருந்து ஒதுங்கியபடி
விபரம் புரியாத வயதுக்கு
வெட்கம் தெரியாதாம்
என்பதை
உண்மையென உணர்த்துவதாய்
தலையணைக்கடியில்
தபாலிட தயாரான கடித கத்தைகள்
உன் முகவரிதான் முழுமையில்லை


இன்று சூரியனுக்கு பக்கத்தில் படுக்கை
புளுக்கங்களோடு என் பொழுதுகள்
அன்பே
மீண்டுமொருமுறை சந்திக்க நேர்ந்தால்
உன் ஊரின் பெயரையாவது சொல்
தவம் செய்த மண்ணை தொட்டு
தரிசித்துக் கொள்கிறேன்.


ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை.

(1995 ஆம் வருடம் இலங்கையிலிருந்து வெளிவரும் தினமுரசு வாரமலரில் பிரசுரமான கவிதை இது எழுத்து நண்பர்களின் பார்வைக்காக.மீள் பிரசுரம்.)

எழுதியவர் : ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை. (14-Apr-15, 1:04 am)
பார்வை : 406

மேலே