இறைவா வா

இறைவா... வா...!!!

யசோதை விழிகளில் மண்ணைத் தூவி
வெண்ணைத் திருடினயோ..? - அவர்
ஓங்கிய கரமும் இறங்கிடும் முன்னே
ஒளிந்து சிரித்தனையோ..???

உன்னை வரிக்கும் கோபியர் மனதினை
வசியம் செய்தனையோ..? - அவர்
கண்ணா... கண்ணா... என்று துதித்தே
தன்னை மறந்தனரோ..???

ஆற்றங்கரையினில் அல்லும் பகலும்
ஆடிக் களித்தனையோ..?
ஊதிய குழலின் கானத்தில் கன்னியர்
உள்ளம் கவர்ந்தனையோ..???

ஆவினம் யாவையும் கானத்தில் ஈர்க்கும்
ஆற்றல் படைத்தனையோ..?
தேமதுரக் குழ லோசையிலே அந்த
தேவரும் மயங்கினரோ..???

விண்ணைப் பிளந்தே விழுந்த மழையினில்
ஆயர்கள் அரண்டனரோ..?
விரலினில் கிரியினை குடையென விரித்தே
உயிரினம் காத்தனையோ..???

யமுனை நதியினில் நமனுக்கிணையென
நாகங்கள் வாழ்ந்ததுவோ..?
நதியினைக் கடக்கையில் நுகரும் விடத்தினில்
புல்லினம் மடிந்தனவோ..???

புல்லினத்தோடு அனைத்தும் காத்திட
காளிங்க நர்த்தனமோ..? - கண்ணா
காளிங்கனோடு நாகங்கள் மிரண்டே
குடியேறின வேறிடமோ..???

இடரெதுவாயினும் மாதவனேயவை
உன்னால் நீங்கியதோ..?
துவாரப யுகத்தில் துயரங்கள் தீர்த்தாய்
யாவரும் மகிழ்ந்தனரே...!!!

எல்லை மீறிய துயரங்கள் யாவும்
கலியுகம் காணுது பார்...!!
தொல்லையளித்திடும் முள்ளைமுறித்திட
என்றோ நீ வருவாய்..??

நல்லவரெனவே அடவினில் முகங்கள்
வஞ்சகர் நீயறிவாய்..!!
நிறத்தினை வெளுக்க, நீசரை ஒடுக்க
இன்றே அவதரிப்பாய்...!!

உன்னை நினைத்தே உருகி அழைப்பதுன்
செவிதனை சேரலையோ..??
எந்தை இறைவா புவியின்னல் களைந்திட
பிறந்திடு நீ விரைவாய்..!!

மாதவன் வருகையில் மண்ணுலகின் கொடு
மாயைகள் விலகட்டும்...!!
பூ லோகம் எங்கும் புன்னைகை சிந்தி
இன்பத்தில் களிக்கட்டும்...!!

எழுதியவர் : சொ.சாந்தி (16-Apr-15, 10:58 pm)
பார்வை : 129

மேலே