வாஸ்து சாஸ்திரமின்றி ஒரு கவிதை
அம்மாவால் மட்டுமே
எளிதாக மூடமுடிந்த
விளிம்பு லேசாய் வளைந்த
சம்படமோ தூக்கோ...
அப்பாவுக்கு பிடிக்குமென
அடிக்கடி வைப்பதால்
அருகில் சென்றதும் வரும்
கருவாட்டு வாசமோ..
சின்ன மாமாவின் பரிசு என்று
பயன்படுத்தாமலே பத்திரமாய்
உள்நுழைந்து பரணில் ஏறிய
வெள்ளி தம்ப்ளரோ...
அத்தை வாங்கிவந்த பண்டங்களை
அப்பொழுதே தீர்ப்பேன் என
பதுக்கி வைக்க உதவும் அந்த
அலுமினியச் சட்டியோ..
நான் பிறந்தபோது வாங்கி
இன்று பருப்புகள் நிரம்ப
அடையாளம் மாறியிருக்கும்
ஹார்லிக்ஸ் குடுவையோ.
இவையெல்லாம் நிரம்பிய
சிறிய இடத்ததையே
அடுப்பாங்கறை என நான்
நம்பியிருந்தேன்.
டப்பர்வேர் டப்பாக்களும்
ஃபைபர் குடுவைகளும்
ப்ளாஸ்டிக் ஆப்பைகளும்
நிரம்பி வழியும்
மாடர்ன் கிட்சன் வரும்வரை...
--கனா காண்பவன்