கண்ணீர்க் குளம்
![](https://eluthu.com/images/loading.gif)
தாடியில்லாக்
கொக்கு முனிவர்
மீன் வரங்கேட்டுத்
ஒற்றைக்கால் தவமிருக்கும்
ஜலக்காடு.
மேகக்கூந்தல் முடித்து
நட்சத்திரப் பூச்சூடிய
நிலவுமங்கை
அலங்காரம் பார்க்கும்
வட்டக் கண்ணாடி.
நீர் ஜீவிகளின் பசிக்கு
அழுக்குக் கரைக்கும்
ஆடைதாரிகளின் சுயநலம்
வாங்கி தூய்மை வழங்கும்
கடவுள்.
தாவர வேர்களுக்குத்
தவணை அடிப்படையில்
வட்டியில்லாக் கடன் வழங்கும்
நீர் வங்கி.
வாங்கியக் கடன் அடைக்க
வழியில்லா மனிதன்
காலைக் கடனையும்
ஈமக்கடனையும் முடிக்கும்
பொது மேடை
உயரம் பாய்தலின்
ஒத்திகையை கரையில்
தொடங்கி ஜலத்தில் முடிக்கும்
தவளைகளின் திடல்
நீச்சல் தெரியாதவர்கள்
செலவில்லாமல் மரணிக்க
கட்டிவைத்த சௌகர்யம்
கஷ்டங்களில்
கலங்கும் மனங்களுக்கு
கலக்கத்தின் பின்னர்
தெளிவு என்னும்
ஞானத்தைப் போதிக்கும் குரு.
மழைக்கலங்களில்
அகன்ற குளங்கள்
வெய்யில் காலம்
வெறும் அங்குலம்
என்றாகும் இற்றை
நாட்களில் எங்கள்
விவசாயிகளின் கண்களுக்குள்
வந்துவிடுகிறது
கண்ணீர்க் குளமாய்.
**மெய்யன் நடராஜ்