தமிழன்டா--------அஹமது அலி---

செம்மரக் கட்டைகளை விடவும்
செந்தமிழர்களின் உயிர்கள்
மிக மலிவு!
=0=
கரையில் மட்டுமல்ல கடலிலும்
சூடு பட்டுச் சாவது தமிழனே
இவன் இன்னும் இந்தியன்!
=0=
இமயத்தில் கொடியை நட்டு
கீழ்த்திசை நாடுகள் எங்கும்
ஆட்சி புரிந்தவன்
எங்கும் அடி வாங்குகிறான்!
=0=
வந்தாரை வாழவைப்பான்-தன்னை
வாழ வைத்தவனை
செருப்பால் அடிப்பான்!
=0=
முதல் குடி மூத்த குடி
என்றெல்லாம் சிலாகிப்பான்
மூத்திரம் குடிக்கவும்
மூத்திரம் அடிக்கவும் யோசிக்க
மூளையை அடகு வைப்பான்!
=0=
உழுதுண்டு வாழ்ந்தவன்
ஊழல் அய்யா அம்மாவை
தொழுதுண்டு வாழ்கிறான்!
=0=
அரக்கனென்று
அறிமுகம் செய்தோரையும்
அடி தொழுது ஆண்டவனாய்
பல்லக்கில் ஏற்றுகிறான்!
=0=
தட்டுத்தடுமாறியாவது
அந்நிய மொழி பேசி
நாகரீகத்தை தன் முகத்தில் பூசி
தமிழின் முகத்தில் கரியை பூசுவான்!
=0=
பழம் பெருமைகளை
மெச்சிக் கொண்டே
பண்பாடுகளை மேற்கத்திய
புதைகுழிக்குள் தள்ளுவான்!
=0=
முன்னோர் சொன்னவைகள்
ஏட்டிலும் பாட்டிலும் இருக்க
எவனோ வந்து எடுத்துச் சொல்ல
ஆமோதித்து மெய் சிலிர்ப்பான்!
=0=
ஒற்றைக் கோவணமும்
உருவப்படும் நிலையிலும்
மதுக்கடை நோக்கியே கவனத்தை
மறவாமல் செலுத்துவான்!
=0=
சமுக நலனுக்காய் போராட
வீதியிறங்கி வர மாட்டான்
சினிமா நடிகனுக்காக
உயிரையே கொடுப்பான்!
=0=
நீர் வளங்களை இழந்த பின்
நில வளங்களை காக்க
மீத்தேன், நியூட்ரினோ
அணு உலைக்கு எதிராக
சிறு குரல் கொடுக்கிறான்!
=0=
உடமைகளை இழந்த பின்னே
உரிமைக் குரல் கொடுத்தே
பழகி விட்டான் பாவம்
இளிச்சவாயன் பட்டம்
இவனுக்குத் தான் பொருத்தமோ?