ஆற்றுப் படுகையும் ஆற்றுப் படுத்தலும்

(வல்லமை மின்னிதழில் வெளியான எனது படைப்பு)
அம்மாவின் முந்தானையோர
ஐம்பது காசுகள்
போதுமானதாக இருந்தது…கல்கோனாக்கள்
தவறியிருந்த
நேற்றைகளின் பொருமல்கள் கரைத்துவிட…

பொரி உருண்டைகளுக்கான
தங்கையின் ஏக்கமும்
அப்படித்தான்…!

அப்பாவின்
முழங்கைச்சட்டை மடிப்பிலும், தொடர்ந்தே வரும்
முள்மீசை முத்தத்திலும்…

இம்முறை தனியே வந்த
அக்காவின் கோபம் இறங்க…
இரண்டு நாள் தள்ளிவந்திருந்த
மாமாவையும் சேர்த்துவைக்கச்
செத்துப் போயிருந்தது… நாட்டுக்கோழியொன்று…!!

வேலைக்குக் காத்திருந்த
சித்தப்பாவின் வெறுமைகளைச்
சாயங்காலக் கிரிக்கெட்டின்
நான்கு சிக்சர்கள் நிரப்பிவிடும்…தவறினால்
அப்பத்தாவின் அம்மாசீர்வாதம்…!!

பிசாசு விழுங்கியிருந்த
பக்கத்துக்கு வீட்டு அக்காவும்…
ஒற்றை எலுமிச்சை, கொத்து வேப்பிலைக்
குளியலோடு
சுகப்பட்டிருந்தாள்…

செதுக்கிய பாதையில்
சிதறா நினைவுகளோடு திரும்புகையில்
தொகுப்பு வீட்டின்
எதிர்க்கதவுக்காரன் செய்தி பகிர்ந்தான்…

சாக்லேட் கடிச்சி வீசறான் சார்
பையன்… இப்பத்தான்
கவுன்சலிங் போயிட்டு வரோம்!!

நன்றி : வல்லமை மின்னிதழ்

எழுதியவர் : நல்லை.சரவணா (18-Apr-15, 9:26 am)
பார்வை : 107

மேலே