என்னோட சாமிக்குன்னு

நான் கண் முழிச்ச நாள் முதலா, அவ
கண்ணை போல எனவளத்தா, எங்காத்தா..!
அப்பன் எறந்த கொறை தெரியாம,
அவ தோளுல தான் தாங்கிக்கிட்டா..!

முள்ளுள கால் கிழிச்சி, வயலுல களை பறிச்சி
வழியில கல்லுடைச்சு, என் வாழ்க்கைக்கு வழி செஞ்சா.. !
பகல் முழுக்க கழனில, கால் கடுக்க நின்றிருப்பா,
இராமுழுக்க, என் காலை வாஞ்சையா அமுக்கி வைப்பா. !!

ஒட்டுபோட்ட சேலைக்காரி
என் வேலைக்காக, சாமிக்கு...
பட்டுசேலை நேந்துக்கிட்டா !!

ஒத்த சேலையில, மொத்த வாழ்க்கை
வாழ்ந்து விட்ட அவளுக்கு, பட்டுசேலை வாங்கி தரதே
எனக்கு பகல்கனவா இருந்துச்சு.. !
கடைசியா......
காந்தி சிரிப்புல, காத்து நின்ன அந்த நாளும் வந்துச்சி.. !

கண்ணுக்கு லட்சணமா, வெள்ளிசரிகை வச்ச
பட்டுபுடவை ஒன்னை, அவ கால்வணங்கி தந்து நின்னா!?
பிரிச்சி பாத்த ஆத்தா, பக்குவமா கேட்டுச்சி
"எந்த சாமிக்கு ஐயா, வாங்கிட்டு வந்தனு.. !?" :-(

அவ வெள்ளந்தி மொகத்தை, வெரிச்ச படி
சிரிச்சிக்கிட்டே, சொல்லி வச்சேன்..
"என்னோட சாமிக்குன்னு.." :-)

எழுதியவர் : நிஷாந்தினி.கே (21-Apr-15, 11:58 am)
பார்வை : 125

மேலே